
சமீபத்திய காலங்களில் இராணுவ தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று விமானி இல்லாமல் இயங்கும் தன்னாட்சி விமானங்களை உருவாக்குவது. போர் விமான பரிணாம வளர்ச்சியில் மனித பங்கு துளியும் இன்றி இயங்கும் விமானம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். மேலும் இது வேட்டை விமானமாக தானாகவே சிந்தித்து செயல்படும் மற்றும் உளவு, கண்காணிப்பு பணிகளிலும் பயன்படும்.
எதிர்காலத்தில் அடுத்த தலைமுறை போர் விமானங்களின் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியா விரைவில் செயற்கை நுண்ணறிவு திறனால் (ஏஐ) இயக்கப்படும் ஆளில்லா தேஜாஸ் விமானத்திற்கான திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மேலும் ஏற்கனவே முன்மொழியப்பட்ட விங் மேன் திட்டவரைவின்படி ஆளில்லா தேஜாஸ் விமானத்திற்காக தேஜாஸ் மார்க்1 ஐ மேம்படுத்தலாம், இதனால் புதிய விமானத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை இதனால் செலவும் குறையும். ஒரு வழக்கமான விமானத்துடன் இணைந்து அதனை எதிரிகளின் வான் பாதுகாப்பு அமைப்பில் இருந்து காக்கும் வகையில் செயல்படும்.
பாதுகாப்பு வட்டார தகவல்களின்படி, இத்திட்டம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டால் இது இரண்டு கட்டங்களாக பிரிக்கப்படும் என தெரிகிறது. முதல் கட்டத்தில், நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட ஆளில்லா எல்.சி.ஏ-தேஜாஸ் உருவாக்கப்படும், அது வழக்கமான மனிதர்களால் இயங்கும் விமானத்திற்கு ஒரு சக்தி பெருக்கியாக செயல்பட முடியும். மேலும் தரை கட்டுப்பாட்டாளர் மற்றும் மனிதர்களால் இயக்கப்படும் விமானத்தின் குழுவினரின் உள்ளீடுகளுடன் ஆபத்தான பயணங்களில் ஒரு சிறந்த துணையாளியாக பயன்படுத்தப்படலாம்.
இரண்டாவது கட்ட திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட விமானம் உருவாக்கப்படும். இதன் செயல்பாட்டில் மனித குழுவினரின் உள்ளீடுகள் மிகக் குறைவாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட இரண்டு திட்டங்களும் சோதனைக்குரியவை, ஆனால் எதிர்காலத்தில் இந்தியா தற்போது உருவாக்கி வரும் அதன் ஹேல் (HALE – HIGH ALTITUDE and LONG ENDURANCE) ரக தாக்குதல் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஸ்டெல்த் திறன் கொண்ட கட்டாக் இயங்குதளங்களுக்காக ஆளில்லா தொழில்நுட்பங்களை உருவாக்க பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட விமானங்களுக்கு உள்ளீடுகளை வழங்குவதற்கான திறன்களைக் கொண்டிருக்கும் முதல் வழக்கமான போர் விமானமாக AMCA இருக்கும். மேலும் தொலைதூர நடவடிக்கைகளின் போது களநிலவரத்தை பொறுத்து செயற்கை நுண்ணறிவு கொண்ட விமானங்களின் கட்டுப்பாடுகளைக் கூட எடுக்கும்.