உயிரியில் போர்முறையின் வரலாறு மற்றும் இந்தியாவின் தயார்நிலை !!

2001ஆம் ஆண்டின் கடைசி மாதங்கள் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மோசமாக அமைந்தன. பயங்கரவாதிகள் உலக வர்த்தக மையத்தில் விமானங்களை மோதிய ஒரு மாதத்திற்குள், 62 வயதான புகைப்பட பத்திரிகையாளர் பாப் ஸ்டீவன்ஸ் அக்டோபர் 2, 2001 அன்று புளோரிடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப நோயறிதல் சோதனையில் மூளைக்காய்ச்சல் என்று தெரியவந்தது ஆனால் விரைவில் அது ஆந்த்ராக்ஸால் ஏற்பட்டது என கண்டறியப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில், ஆந்த்ராக்ஸ் வித்திகளால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 17 “சந்தேகத்திற்கிடமான” கடிதங்கள் தபால் துறைக்கு வந்தது. பல தனிநபர்களும் நிறுவனங்களும் வெள்ளைப் பொடியுடன் உறைகளைப் பெற்றிருந்தாலும், அவற்றில் பல சாதாரண கடித உறைகளாகவே இருந்தன.

“உயிரியல் தாக்குதல்கள், அரசுகள் மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்படலாம். வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்களை சந்திக்க இந்திய ராணுவம் பயிற்சியளிக்கப்பட்டிருந்தாலும்,போதுமான நிதி மற்றும் நவீன உபகரணங்கள் இல்லாததால் திட்டங்கள் பின்தங்கியுள்ளது, ”என்கிறார் கூட்டுப் போர் ஆய்வு மைய இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா (ஓய்வு). இவர் இந்திய தரைப்படையின் ராணுவ நடவடிக்கைகள் பிரிவின் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, அதன் பரந்த ஒழுங்கற்ற மக்கள் தொகை, மோசமான சுகாதார வசதிகள் மற்றும் மோசமான இணைப்பு வசதிகளுடன், ஒரு வைரஸ் வெடிகுண்டு மீது அமர்ந்திருக்கிறது. கோவிட் -19 இன் இறப்பு, தொற்று மற்றும் மீட்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், வல்லுநர்கள் முழு பாதிப்பு பற்றிய தரவுகள் கிடைக்க சிறிது காலமாகும் என்கிறார்கள்.

கோவிட்19 விமர்சனங்கள்:

இந்த நோய் பல நாடுகளையும் அந்நாடுகளின் பொருளாதாரங்களையும் பல மடங்கு பின்னால் அனுப்பியுள்ளது. மத்திய சீனாவின் வுஹானில் இந்த பாதிப்பு பரவ தொடங்கியவுடன், பலர் இது வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, எனப்படும் ஒரு இராணுவ ஆய்வகத்திலிருந்து தப்பித்ததாக எச்சரித்தனர், இந்த ஆய்வகம் உண்மையிலேயே கொடிய நோய்க்கிருமிகளின் ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணரும் சீன உயிரியல் போர் திறன்களைப் பற்றிய நிபுணருமான டேனி ஷோஹாமின் கூற்றுப்படி, இந்த நிறுவனம் பெய்ஜிங்கின் ரகசிய உயிரி ஆயுத திட்டத்தின் ஒரு பகுதியாகும். 2019 ஆம் ஆண்டில், எபோலா உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்களைப் பற்றி ஆய்வு செய்யும் சீன ஆய்வாளர் சியாங்குவோ கியுவை கனடா வெளியேற்றியது, ஆபத்தான தொற்று நோய்களைக் கையாளும் சீன ஆய்வகங்களில் பணிபுரிந்த முந்தைய அனுபவம் அவருக்கு இருந்தது குறிப்படத்தக்கது. சீனா தற்போது ஐந்து உயிரி ஆய்வக வசதிகளை உருவாக்கி வருகிறது.

மறுபுறம் வைரஸை தங்கள் நாட்டிற்கு அமெரிக்க இராணுவம் கொண்டு வந்ததாக பெய்ஜிங் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முன்னாள் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாட், “கொரோனா ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரஸ்” சீன நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க பெய்ஜிங்கின் எதிரிகளால் வேண்டுமென்றே ஒரு உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சுமார் 50 செயல்பாட்டில் உள்ள அல்லது கட்டுமானத்தின் கீழ் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு ஆய்வகங்களைக் கொண்டுள்ளன என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஈரான் மற்றும் வட கொரியாவிலும் இரசாயன ஆயுத ஆய்வகங்கள் இருப்பதாக மேற்கத்திய உளவுத்துறை சந்தேகிக்கிறது. ஒரு நாடு எபோலா அல்லது மார்பர்க் போன்ற ஆபத்தான நோய்க்கிருமிகளைப் பற்றிய ஆய்வினை அந்த வைரஸ்களை இறக்குமதி செய்யாமல் நடத்த முடியாது. வைராலஜி ஆராய்ச்சி செய்யும் அனைத்து நாடுகளும் தங்கள் சொந்த காற்று வழங்கல் மற்றும் வடிப்பான் அமைப்புகளுடனும், 24×7 பாதுகாப்புடன் கூடிய நான்காவது பாதுகாப்பு நிலை உயரி ஆய்வகங்களை (BSL -4) கொண்டுள்ளன. இங்கு நடத்தப்படும் ஆய்வுகள் முலம் நிவாரணிகளையும் உருவாக்கலாம் அல்லது ஆயுதங்களையும் உருவாக்கலாம். இத்தகைய ஆய்வகங்களை கொண்டுள்ள நாடுகளாவன அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, தைவான், சுவீடன், சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, ஹங்கேரி, இங்கிலாந்து, தென்னாஃப்பிரிக்கா, கேபோன், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா ஆகும்.

இந்திய விமானப்படையின் மிக முக்கியமான கட்டையகம் ஒன்றின் முன்னாள் தளபதி ஒருவர் கூறும்போது, “உயிரியியல் பயங்கரவாதத்தை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் திறன்கள் கொரோனா வைரஸைக் கட்டுபடுத்த தேவையானவற்றுடன் ஒத்தவை. நோயாளிகளை வெளியேற்றுவதற்கு முன்பு தனிமைப்படுத்தவும், சிகிச்சையளிக்கவும், தூய்மைப்படுத்தவும் பெரிய மருத்துவ வசதிகள் தேவை. முகமூடிகள் மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் வீரர்களுக்கு சிறப்பு ஆடை தேவை. ” என்றார்.

தடுக்க கடினமான தனிநபர் தாக்குதல்கள்:

தற்போது, ​​ஜூலை-ஆகஸ்ட் டோக்கியோ ஒலிம்பிக்கின் போது உயிரி பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்க ஜப்பான் போர்க்கால வேகத்தில் களமிறங்கியுள்ளது, இப்போட்டிகள் வெளிநாடுகளிலிருந்து சுமார் 600,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பற்றிய ஆய்வு செய்வதற்காக முதன்முறையாக, எபோலா, மார்பர்க், லாசா, கிரிமியன்-காங்கோ மற்றும் தென் அமெரிக்க வைரஸ்கள் என ஐந்து வகையான வைரஸ்களை ஜப்பான் நேரடி இறக்குமதி செய்துள்ளது. வைரஸ் சென்சார்கள் பெரும்பாலும் பயனற்றவையாக இருப்பதால், நோய்க்கிருமிகளை ஒரு நாட்டிற்கு கொண்டு வருவது பயங்கரவாதிகளுக்கு எளிதானது. ஒரு தனிநபர் ஒரு தொற்றுநோயை கட்டவிழ்த்துவிடுவது எளிது – கிருமிகளை பொடிகள் மற்றும் ஸ்ப்ரேக்களில் கலக்கலாம். பாதிக்கப்பட்ட உறைகள் அல்லது நோட்பேப்பரில் அவற்றை அஞ்சல் மூலம் அனுப்பலாம். அவற்றை உணவு அல்லது நகரத்தின் நீர் விநியோகத்தில் சேர்க்கலாம். ஒரு வாகனம்,கட்டிடம் அல்லது விமானத்திலிருந்து காற்றில் கலக்கலாம். நவீன பயங்கரவாதி மிகவும் உந்துதல் கொண்ட மெத்த படித்த நபர் ஆவார். மேலும் மேம்பட்ட அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டங்களை பெற்றவராகவும் இருக்கலாம்.

ஒரு தனியார் வைராலஜி ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள ஒரு மருத்துவ மாணவர் ஒரு சிறிய அளவிலான பெரியம்மை நோய்க்கிருமியை ஆயுதமாக்குவதைத் தடுக்க எதுவும் இல்லை அசல் கிருமிகள் இல்லையெனில் அவரால் செயற்கை பதிப்புகளை தயாரிக்க முடியும்.”பயங்கரவாதிகள் மற்றும் அரசுகள் கிருமிகளை வைத்து மில்லியன் கணக்கானவர்களைக் கொல்ல விரும்பும் உலகில் நாங்கள் வாழவில்லை என்று நம்ப நாம் அனைவரும் விரும்புகிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 9/11 க்கு நாங்கள் தயார் நிலையில் இல்லை. இதன் விளைவாக மூவாயிரம் அமெரிக்கர்கள் இறந்தனர். அடுத்த முறை இது ஒரு தொற்றுநோயாகவும் அது உலகின் மாநகரங்களை முற்றிலும் அழிக்க கூடியதாகவும் இருக்கலாம் ”என்று ஓய்வுபெற்ற இரகசிய சிஐஏ அதிகாரி சார்லஸ்“ சாம் ”ஃபாடிஸ் எழுதுகிறார், அவர் பேரழிவு ஆயுதங்களைக் கண்காணிக்கும் அமெரிக்க உளவு அமைப்பின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

ஹரியானாவில் உள்ள மானேசரில் இந்திய ராணுவத்தின் தனிமைப்படுத்தல் முகாமை கண்காணிக்கும் மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மையம் வெளிநாட்டிலிருந்து வந்த பல நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது மேலும் அவசரகால சுகாதார பிரச்சனைகளை கையாள்வதில் இராணுவம் மிகுந்த அனுபவம் பெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்ட அந்த அதிகாரி, கடந்த இரண்டு தசாப்தங்களாக அணுசக்தி, உயிரியல் மற்றும் இரசாயன தாக்குதல்களை எதிர்கொள்ள இராணுவம் புதிய உபகரணங்களை வாங்கவில்லை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை (டிஆர்டிஓ) 2003 ஆம் ஆண்டில் அணு, உயிரியல், வேதியியல் எதிர் நடவடிக்கைகளுக்கான உளவு வாகனம் ஒன்றை உருவாக்கியது இதனை இந்திய இராணுவம் தற்போது அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் எதிர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறது. இது அமெரிக்காவிலிருந்து இலகுரக ஒருங்கிணைந்த ஆடை தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது, இது துருப்புக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக நகரவும் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. மேலும் (ஐ.எஸ்) பயங்கரவாதிகள் ஒரு சிறிய அணு ஆயுதத்தை வெடிக்கக்கூடும் என்று பாதுகாப்பு நிறுவனங்கள் அஞ்சுகின்றன; புல்வாமா நிகழ்வுக்கு பின்னர் பாகிஸ்தான் அணு ஆயுத பதிலடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இத்தகைய போர்முறையை எதிர்கொள்ள தயாராக உள்ளதா ??

டிசம்பர் 1998 இல் இருந்தே, உயிரியியல் தாக்குதல்களை சமாளிக்க இந்தியா தனது மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியது. மேலும் 1972ல் ஐக்கிய நாடுகளின் உயிரியல் மற்றும் நச்சு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், இந்தியா தற்போது வரை உயிரியல் ஆயுத திட்டத்தை செயல்படுத்தவில்லை. இருப்பினும், பாதுகாக்கப்பட்ட இடங்களில் இராணுவம் தற்காப்புக்கென உயிரியல் போர்முறை எதிர்ப்பு உபகரணங்களை பராமரிக்கிறது. ஆனால் நாட்டின் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டால் மேம்பட்ட மருத்துவ மற்றும் பாதுகாப்பு ஆய்வகங்களின் விரிவான உதவியுடன், உயிரியல் போரை எதிர்ப்பதற்கான வழிகளை இராணுவம் ஆராய்ச்சி செய்து வருகிறது. மேலும் தெளிப்பான் விமானங்கள் முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரையிலான முறைகளைப் பயன்படுத்தி, நாட்டின் மீது தாக்குதல் நடத்திய நாட்டின் மீது இத்தகைய பதில் தாக்குதலை மேற்கொள்ளும் அறிவியல் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

“அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை இந்தியா வைத்திருக்கவில்லை அல்லது அவற்றை உபயோகப்படுத்துவதை நம்பவில்லை. எவ்வாறாயினும், ஒரு எதிரி நாட்டின் உயிர் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் போதுமான வளங்களையும் ஆய்வகங்களையும் கொண்டுள்ளது. ஆனால் தேவைப்பட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதல்கள் நடத்துவதன் மேலும் எதிரிகளுக்கு உளவியல் ரீதியான அடியை ஏற்படுத்தும்” என்று இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குமார் கூறுகிறார். மேலும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உயிரி தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இந்தியாவில் உள்ளது என்றும், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் அறிவுள்ள விஞ்ஞானிகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தொற்றுநோய்களைக் கையாள்வதில் போதுமான அனுபவமுள்ளவர்கள் என்றும் வட்டாரங்கள் கூறுகின்றன. வாஷிங்டனில் உள்ள சிந்தனைக் குழுவான என்.டி.ஐ படி, இந்தியா ஏராளமான மருந்து உற்பத்தி வசதிகள் மற்றும் உயிர் பாதுகாப்பு நிலைகள் 3 மற்றும் 4 உடன் பயோகாண்டெய்ன்மென்ட் ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.

இந்திய அரசின் சில அமைப்புகள், ஆயுதப்படைகள் மற்றும் வேறு சில ஆராய்ச்சி அமைப்புகள் இவ்வாறு திறன்மிக்கவையாக இருந்தாலும் மற்றொரு பக்கம் வேறு மாதிரியானதாக உள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் உள்நாட்டு ஆயுதத் தோல்விகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. முன்னாள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஒய்வுப்பெற்ற குருப் கேப்டன் சந்தீப் மேத்தா கூறும்போது “ஒரு உயிரியல் தாக்குதலை சமாளிக்க இந்தியாவின் தயார்நிலை பின்தங்கிய நிலையில் உள்ளது. அதன் திறன் நிவாரண வழங்குநர்களுக்கு உதவுவதில் மட்டுமே உள்ளது.” ஹைதராபாத்தில் உள்ள தடுப்பு மருத்துவ நிறுவனத்தில் உள்ள உயிர் பாதுகாப்பு நிலை 2 ஆய்வகம் தான் உயிரியல் தாக்குதலுக்கு அரசாங்கத்தை தயார்படுத்துவதில் வழிகாட்டுதலை வழங்குகிறது. இருப்பினும், இந்திய இராணுவத்தின் மருத்துவப் படை வல்லுநர்கள் இந்திய மருத்துவமனைகள் போதுமான அளவு தயார்நிலையில் இல்லை என்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதாவது சிறந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வகங்கள் இருந்தாலும் பெரும்பாலான மருத்துவமனைகள் இத்தகைய பிரமாண்ட தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமான உண்மை ஆகும்.

மேலும் அரசியல் மத்திய மாநில அரசியல் கட்சிகளின் கருத்து வேற்றுமைகள், ஒழுங்கற்ற சமுக அமைப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவையும் மாபெரும் தடைகளாக விளங்குகின்றன.