
கடந்த புதன்கிழமையன்று ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அங்குள்ள இந்திய தூதரகத்தை தாக்க திட்டம் தீட்டி இருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை ஹக்கானி குழுவினர் நடத்தியதாக ஆஃப்கன் பாதுகாப்பு படைகள் தெரிவித்தன.
ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ள இந்த தாக்குதலை ஹக்கானி குழு நடத்தியுள்ளது. இந்திய தூதரகத்தை தாக்க இருந்த நிலையில் அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததால் உள்புக முடியாமல் அருகில் இருந்த சீக்கிய குருத்வாராவை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஹக்கானி குழுவானது தலிபான்களுடனும் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ உடனும் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டது. மேலும் அல் கொய்தாவுடனும் தொடர்புகளை கொண்ட இந்த குழு அல் கொய்தாவிற்காக நேட்டோ படைகள் மீது பல தாக்குதல்களை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்கின் சீக்கிய பாராளுமன்ற உறுப்பினர் நரிந்திர சிங் கால்சா கூறும்போது இத்தாக்குதல் நடைபெற்ற போது ஒரு மதச்சடங்கு நடைபெற்றதாகவும் அப்போது உள்ளே சுமார்200 பேர் இருந்ததாகவும் கூறினார். இத்தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆகியுள்ளது.