5பில்லியன் டாலர் அளவு இராணுவ தளவாட ஏற்றுமதியே இலக்கு : பிரதமர் மோடி

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து பில்லியன் டாலர் அளவிலான தளவாட ஏற்றுமதியே இந்தியாவின் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார்.இதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பற்றியும் ,வெளிநாட்டு முதலீடு குறித்தும் பேசியுள்ளார்.

11வது இராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் இந்தியா போன்ற பெரிய நாடுகள் இறக்குமதியையே மொத்தமாக சார்ந்திருக்க முடியாது என்றும் இதற்காக கடந்து ஐந்து ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவும் ஆர்டில்லரி துப்பாக்கி, விமானம் தாங்கி கப்பல்கள்,நீர்மூழ்கிகள், தேஜஸ் மற்றும் வானூர்திகள் என பலவும் தயாரித்து வருகிறது.

2014ல் இந்தியாவின் இராணுவ தளவாட ஏற்றுமதி என்பது 2000 கோடியாக இருந்தது.அடுத்த இரு ஆண்டுகளில் இது 17,000 கோடியாக உயர்ந்தது.தற்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து பில்லியன் டாலர்கள் , அதாவது 35000 கோடிகள் அளவிற்கு இராணுவ தளவாட ஏற்றுமதி என்பது அரசின் இலக்காக உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இந்தியா கொள்கை முடிவுகள் எடுக்க திணறிய காரணத்தாலேயே மிகப் பெரிய இராணுவ தளவாட இறக்குமதி நாடாக மாறியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.  

முப்படை தளபதி மற்றும் இராணுவ விவகார துறை உருவாக்கல் காரணமாக பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது உத்வேகம் ஏற்படும். இனி விண்வெளி பகுதியிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிக்கும்.

இந்தியா அமைதியான நாடு.இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான இராணுவ ஏற்பாடுகள் எந்த நாட்டையும் குறிப்பிட்டு அல்ல.எங்களின் பாதுகாப்பையும் பக்கத்து நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது எங்கள் கடமை என பிரதமர் பேசியுள்ளார்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.