இந்திய விமானப்படையின் தற்கொலை தாக்கும் திட்டம்

இந்திய விமானப்படையின் தற்கொலை தாக்கும் திட்டம்
இஸ்ரேலியர்கள் விமானப்படை மூலம் தங்களது சக்திக்கு அப்பாற்பட்ட , எதிராளியுடைய கற்பனை திறனுக்கு எட்டாத வகையில் தாக்குதல் நடத்துவதற்கு பெயர் பெற்றவர்கள் !!
உதாரணம் : என்டீபெ மீட்பு மற்றும் ஈரானிய அனுஉலை தாக்குதல்.
ரஷ்யர்கள் மிகவும் மூர்க்கத்தனம் கொண்டவர்கள் அது அவர்கள் ரத்தத்தில் ஊறியது. பல இடங்களில் அவர்கள் மூர்க்கதனமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
அமெரிக்கர்களோ அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களால் உலகை மிரட்டி வருபவர்கள்.
இவர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய விமானப்படை எங்குள்ளது ?? எத்துணை பலம் பொருந்தியது ??
வரலாறு நமக்கு மிக தெளிவாக ஒன்றை எடுத்துரைக்கிறது அதாவது தேவைபட்ட நேரங்களில் எல்லாம் இந்திய விமானப்படை ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது சாத்தியமற்றவை என கருதப்படும் நடவடிக்கைகளை அனாயசமாக நிகழ்த்தி காட்டியுள்ளது. இவர்களால் இது எப்படி சாத்தியமாகிறது என உலகை வாய்பிளக்க வைத்தவர்கள் இந்திய விமானப்படையினர். அதற்கு இந்திய விமானப்படையின் விமானிகள் முதல் சாதாரண வீரர்கள் அனைவருடைய அரப்பணிப்பும், அளப்பரிய தியாக உணர்வுமே காரணம்.
சமீபத்தில் நடைபெற்ற பாலகோட் தாக்குதலை எடுத்துக்கொண்டால் , 
இந்திய விமானப்படை பாலகோட் தாக்குதலுக்கு முன்பு 2தினங்களாக அதிதீவிர பயிற்சி மேற்கொண்டு இருந்தது. தாக்குதலுக்கான விமானங்கள் இயங்கும் படைத்தளங்கள் 2 தினங்களாக தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்தது அதாவது தரைப்பணி குழு வீரர்கள் கூட 2 இரவுகள் உறக்கமின்றி பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர் காரணம் வெறுமனே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் தாக்குதல் நடத்தாமல் பாகிஸ்தான் மண்ணிலும் தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.
பிரதமர் அலுவலகம் தாக்குதல் நடவடிக்கைக்கு பச்சை கொடி காட்டியதும் இந்திய விமானப்படை நடவடிக்கையை தொடங்கியது. தாக்குதல் நடத்தப்பட்ட இரவு பல்வேறு தளங்களில் இருந்து இந்திய விமானப்படையின் நிபுணத்துவம் வாய்ந்த விமானிகள் (Master pilots) தலைமையில் இந்திய விமானிகள் தங்களது விமானங்களில் புறப்பட்டனர். இந்த நிபுணத்துவம் வாய்ந்த விமானிகள் (Master pilots) தான் இந்திய விமானப்படையின் போர் தந்திரங்கள் , வான்வழி போர் உத்திகள் ஆகியவற்றை வகுக்கும் எலைட் விமானிகள்.
இவர்களுடைய ஸ்க்வாட்ரன்கள் “GREEN LINE SQUADRON” என அழைக்கப்படுகின்றன. மொத்தமாக இத்தகைய ஸ்க்வாட்ரன்கள் எத்தனை உள்ளன என்பது பரம ரகசியமாகும். இந்த மாஸ்டர் பைலட்கள் அனைவரும் குவாலியரில் அமைந்துள்ள (Tactics and Air Combat Development School) அதாவது “தந்திரோபாய மற்றும் வான்வழி போர் மேம்பாட்டு பள்ளியின்” மாணவர்கள் ஆவர். இந்த பள்ளி அமெரிக்க கடற்படையின் “TOP GUN” திட்டத்துக்கு இணையானது.
அன்று இரவு விண்ணில் எழும்பிய இந்திய விமானப்படையின் படையணி 1971க்கு பிறகு இந்த துணைக்கண்டம் கண்ட மிகப்பெரிய தாக்குதல் படையணியாகும்.
ஒரு முழு அளவிலான போருக்கே இந்திய விமானப்படை தயாராக இருந்தது.
பாலக்கோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை சிதைத்து விட்டு திரும்பி வரும் வழியில் பாகிஸ்தான் விமானப்படையின் (CAP- Close Air Protection unit) அருகில் இருந்து வான் பாதுகாப்பு வழங்கும் படையணி இந்திய படையை இடைமறித்தது. ஆனால் அடுத்தடுத்த நொடிகளில் அவர்களுடைய ராடாரில் பல விமானங்கள் தென்பட பாக் படையணி தலைதெறிக்க பறந்து ஒளிந்து கொண்டது.
இதிலிருந்தே இந்த நடவடிக்கையின் தீவிரத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
பாலகோட் தாக்குதல் நம் பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி .இந்த வெற்றி நமது ராணுவ வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பக்கங்கள் ஆகும். இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை உலகநாடுகளால் புகழப்பட்ட அதே நேரத்தில் இந்திய விமானப்படையின் போர்க்குணத்தையும் , போர்த்திறனையும் உலகம் உணர்ந்து கொண்டது.
கடந்த இருபது வருடங்களாக 
உலக நாட்டு விமானப்படைகளுடன் பல்வேறு பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்குபெற்று வல்வரசு நாடுகளையே (அமெரிக்கா உட்பட)வீழ்த்தி பதிவு செய்த வெற்றிகள் நம் இந்திய விமானப்படை விமானிகளின் போர்த்திறன் மற்றும் சிறந்த போர் உத்திகளுக்கு சாட்சி !!
அமெரிக்க விமானப்படை கர்னல். க்ரெக் நியுபெக் சில வருடங்களுக்கு முன் குவாலியரில் நடைபெற்ற விமானப்படை பயிற்சி நிறைவுக்கு பின் கூறியதாவது “கடந்த இரண்டு வாரங்களில் பார்த்தவற்றை வைத்து சொல்கிறேன் இந்திய விமானப்படை உலகின் சிறந்த விமானப்படையுடன் கடினமாக மோதும் ஆற்றல் கொண்டது. இந்திய விமானப்படையுடன் போரிடும் ஒர் விமானி அவர்களை குறைத்து மதிப்பிட்டால் அவருக்காக வருத்தப்படுவேன் ஏனெனில் அவர் நிச்சயமாக திரும்பி செல்லமாட்டார்”
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள எல்மன்டார்ஃப் படைத்தளத்தில் நிலைநிறுத்தப்ட்டுள்ள அமெரிக்க விமானப்படையின் 3வது படையணியின் தளபதி கர்னல். மைக் ஸ்நாட்க்ராஸ் அவர்கள் கூறியதாவது “இந்த பயிற்சியின் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தது காரணம் இந்தியர்களின் போர் உத்திகள் நாங்கள் நினைத்திருந்ததை விடவும் பன்மடங்கு மேம்பட்டு இருந்தது. ஒர் திட்டம் வேலை செய்யவிட்டால் நொடிப்பொழுதில் அதில் சிறு மாற்றங்கள் செய்து திணறடிப்பதில் இந்திய விமானிகள் வல்லவர்கள்” என்பதாகும்.
இப்படி சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் விமானப்படை இந்திய விமானப்படையிடம் மண்ணைக் கவ்வியது. மற்றுமொரு சிரியா அல்லது ஈராக் எனவும் இந்தியா ஒர் முன்றாம் உலக நாடு என ஏளனமாக நினைத்திருந்த அமெரிக்காவின் பிடரியில் இந்திய விமானப்படை ஓங்கி அடித்த அடியில் ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பாதுகாப்பு வட்டாரங்களும் அலறின. இதுவே இந்திய விமானப்படையின் தாக்குதல் நுட்பங்களின் வெற்றிக்கும் , அபரிமிதமான அர்ப்பணிப்புக்கும் திறனுக்கும் கிடைத்த வெற்றியாகும் !!
சரி தற்போது இந்த பதிவின் மையக்கருவான ஒர் நிகழ்வை பற்றி காண்போம் . அது 1971ஆம் வருடம் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் நிகழ்ந்த ஒர் சாகக நிகழ்வு. அன்று இந்திய விமானப்படைக்கு துணைக்கண்டத்தில் சவால் கொடுக்ககூடிய அளவுக்கு எதிரிகள் இல்லை. பாகிஸ்தான் விமானப்படையும் நொறுக்கப்பட்டு இருந்தது. இந்தியா ஒர் மாபெரும் வெற்றியை (டாக்கா) நெருங்கி கொண்டிருந்த நேரம்.
அந்த சமயத்தில் தான் அமெரிக்கா தனது “யு.எஸ்.எஸ் இன்டிபென்டன்ஸ்” எனும் 95,000டன்கள் எடை கொண்ட ராட்சத விமானந்தாங்கி போர்க்கப்பலை இந்தியாவுக்கு எதிராக வங்காள விரிகுடா பகுதிக்கு அனுப்பியது.
சோவியத் ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தாலும் இந்திய விமானப்படை சும்மா கையை கட்டி வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. உடனடியாக ஒர் சாகச திட்டம் வகுக்கப்பட்டது அதாவது அந்த ராட்சத அமெரிக்க கப்பல் மீீது காமிகாஸே (Kamikaze attack) வகை தாக்குதல் நடத்துவது தான் அது.
காமிகாஸே தாக்குதல் என்பது தற்கொலைக்கு சமமான தாக்குதல் முறையாகும். இரண்டாம் உலக போரில் ஐப்பான் இந்த உத்தியை பயன்படுத்தி தான் பியர்ல் ஹார்பரை தாக்கி அமெரிக்க கடற்படையின் பெரும்பிரிவை அழித்தது.
அதன்படி இத்திட்டம் இந்திய விமானப்படை விமானிகளிடம் தெரிவிக்கபட்டது உடனடியாக 40விமானிகள் தாமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முன்வந்தனர். குண்டுவீச்சு மட்டும் அல்ல தேவைப்பட்டால் விமானத்துடன் மோதி உயிரை கொடுத்தாவது அந்த ராட்சத கப்பலை மூழ்கடிக்க தயாராக இருந்தனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல 40பேர் தங்களது மரண சாசனத்தை தாங்களே எழுதிக்கொண்டனர், இந்த தேசத்தின் மீதும் அதன் குடிகள் மீதும் கொண்ட பாசத்திற்காக இந்த தேசத்தின் இறையாண்மையை காக்க உலகின் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசான அமெரிக்காவை எதிர்க்க 40பேரும் தயாராகினர் அவர்களின் குடும்பங்கள் அரசால் கவனிக்கப்படும் என உறுதியும் அளிக்கப்பட்டது.
40பேரும் தங்களது கேன்பரா (Canberra) 
விமானத்தில் ஆயதங்களுடன் தற்கொலை தாக்குதல் நடத்தி அந்த ராட்சத கப்பலை மூழ்கடிக்க தயாரான போது கடைசி நேரத்தில் சோவியத் ஒன்றியம் மிகப்பெரிய கடற்படை பிரிவை அனுப்பியதால் அமெரிக்கா பின்வாங்கியது.அதனால் இத்திட்டத்திற்கான தேவையும் இல்லாமல் போனது. இந்திய வரலாற்றில் மாபெரும் வீரகாவியமாக வந்திருக்க வேண்டியது நிறைவேறவில்லை, எனினும் 40உயிர்கள் காக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியே…
இந்த 40பேர் கொண்ட படையணியின் தலைவராக ஏர் கம்மொடர் க்ரிஷன் குமார் பத்வார் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய விமானப்படை (Log book) பதிவேட்டில் இருந்து கிடைக்கபெற்ற தகவலால் தான் இத்திட்டம் வெளி உலகிற்கு வெளிச்சமானது. இவர் இந்திய விமானப்படையின் 35வது ஸ்க்வாட்ரனை சார்ந்தவர் , அதே 1971போரில் பல்வேறு பாக் படைத்தளங்கள் மற்றும் கராச்சி நகரத்தில் எண்ணெய் கிடங்குகளை விமானம் மூலம் குண்டு வீசி துவம்சம் செய்தவர் அதற்காக வீர் சக்ரா விருதினை பெற்றவர்.
இது சார்ந்த குறிப்புகளை அவருடைய பதிவேட்டு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காணலாம். அது இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவீரர்கள் எல்லாம் மறக்கப்பட்டவர்கள் ஆவர் !!
ஏறத்தாழ 40வருடங்களுக்கு பின்பு தான் இந்த சம்பவம் பற்றி தெரிய வருகிறது. அந்த 40மாவீரர்களும் இத்தனை நாளும் சாதாரண மனிதனாக நம்மிடையே வாழந்து இறந்தும் விட்டார்கள் மீதமுள்ள 39விமானிகள் யாரென தெரியாது. எழுதிவைத்து கொள்ளுங்கள் இதைபோல் தான் பாலகோட் தாக்குதல் நடத்திய வீரர்களின் முடிவும் இருக்கும் . ஏன் விங் கமாண்டர் அபிநந்தன் கூட மாட்டிகொள்ளாமல் இருந்திருந்தால் அவரை பற்றியோ அல்லது அவரது சாகசத்தை பற்றியோ ஒருபோதும் அறிந்திருக்க மாட்டோம்.
இப்போதும் நம் முப்படை வீரர்களும் எங்கோ ஒரிடத்தில் நிச்சயமாக உயிரை பணயம் வைத்து சாகசம் புரிந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் வரலாற்றால் கொடுக்கபட போவதில்லை !!
ராணுவ பணியில் அங்கீகாரம் எல்லாம் மிக அரிது .
இந்த மாதிரி வீரர்கள் கொண்டாடப்படாமல் , மோசடி செய்யும் அரசியல்வாதிகளும் திரைநட்சத்திரங்களும் தான் மக்களுக்கும் இளம்தலைமுறையினருக்கும் ஹீரோவாக திகழ்கிறார்கள் !!
ராணுவ வீரர்களின் தியாகமும் வீரமும் பள்ளி பாட புத்தகங்களில் வராமல் மறக்கடிக்கப்படுகிறது ஏனோ ??
நாட்டில் தேசப்பற்று பெருகிவிடும் என்றா ??
😢😢😢😢😢
இராணுவ வீரர்களை பாராட்ட வேண்டும் என இல்லை ஆனால் தயவுசெய்து இகழாமலாவது இருங்கள்…

Leave a Reply

Your email address will not be published.