பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லாகுட்டி விமானம், பஞ்சாப் மாநிலத்தில் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படையினர் அளித்த தகவலையடுத்து ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் பெரோஷ்பூரின் பாகிஸ்தான் எல்லையோரம் ஆளில்லாகுட்டி விமானம் ஒன்று பறந்ததாக கூறப்படுகிறது. அது இரவு 12 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும் இதை அறிந்த எல்லை பாதுகாப்பு படையினர், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பஞ்சாப் போலீசார், உளவுத்துறையினர், பிஎஸ்எப் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
மேலும் ஆளில்லாகுட்டி விமானம் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சி நடந்ததா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை எடுத்து வந்து இந்திய எல்லையில் ஆளில்லாகுட்டி விமானம் வீசி விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து வான்வெளி மூலம், ஆயுதங்கள் கடத்துவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Polimer