ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி…..

ராணுவம்தான் தமது குடும்பம் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி தமது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட ஜம்மு காஷ்மீருக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் நாட்டைக் காக்கும் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்றுஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிக்கு சென்றார். அங்கு வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி ரஜோரியில் வீரர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். 
தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடுவது இந்தியர்களின் மரபு என்று கூறிய மோடி தாமும் தமது குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட இங்கு வந்திருப்பதாக கூறினார் . ராணுவ வீரர்கள் தாம் தமது குடும்பத்தினர் என பிரதமர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கால மாற்றத்துக்கு ஏற்றபடி ராணுவ வீரர்கள் நவீனமயமாக இருக்க வேண்டும்.
ராணுவத் தளவாடங்கள் நவீனமானவையாக இருக்க வேண்டும். நமது பயிற்சிகள் சர்வதேச தரத்தில் அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட மோடி நமது ராணுவீரர்களின் முகத்தில் சோர்வை தாம் காண விரும்பவில்லை என்றார். 
நாட்டுக்கு பல்வேறு எல்லைப் பகுதிகள் உள்ள போதும் ரஜோரி எல்லை தனித்துவமானது என்று மோடி கூறினார். போர், அத்துமீறல்கள், தீவிரவாத ஊடுருவல்கள் போன்ற எந்த ஒரு பிரச்சினை நேரிட்டாலும் இந்தப் பகுதி வீரர்கள்தாம் அதனை முதன் முதலாக எதிர்கொள்கின்றனர் என்று மோடி கூறினார்.
இந்தப் பகுதி தோல்வியையே சந்திக்காத வீர நிலம் என்றும் மோடி பாராட்டு தெரிவித்தார்.இது யாராலும் வெல்ல முடியாத பகுதியாக இருப்பதாக குறிப்பிட்ட மோடி அங்குள்ள வீரர்களுடனும் தீபாவளியைக் கொண்டாடினார்.
பத்தான் கோட்டில் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி முதன்முறையாக தாம் பிரதமராக பொறுப்பேற்ற போது வீரர்களை சந்தித்ததை நினைவுகூர்ந்தார்.
ஆயுதப்படை வீரர்களுடன் பேசிய போது, தேசிய அளவில் போர் நினைவுச் சின்னம் இல்லை என்ற தகவலால் மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்தார். இப்போது போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தைப் பார்ப்பதை விட அதிக அளவில் மக்கள் போர் நினைவுச் சின்னத்தை காண வருவதாகவும் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பின்னர் டெல்லி திரும்பும் வழியில், பத்தான்கோட் விமான தளத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள தாக்குதல் திறன் படைத்த அபேச்சி ஹெலிகாப்டர்களை பிரதமர் பார்வையிட்டார்.

Polimer

Leave a Reply

Your email address will not be published.