கௌரவ கேப்டன் கரம்சிங்

கௌரவ கேப்டன் கரம்சிங்
கௌரவ கேப்டன் கரம்சிங் பஞ்சாப் மாநிலத்தின் சங்ருர் மாவட்டத்தில் உள்ள பலியவாலா என்ற கிராமத்தில் 15 செப்டம்பர் 1915ல் பிறந்தார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்த கரம் சிங் அவர்கள் சிறுவயதில் இருந்தே சாகச விரும்பியாக இருந்தார்.அவரது மாமா இராணுவத்தில்  JCO வாக இருந்த காரணத்தினால் இராணுவத்தில் இணைய விரும்பினார்.
15 செப்டம்பர் 1941ல் தனது 26வது அகவையில் இராணுவத்தில் இணைந்தார் கரம் சிங் அவர்கள்.ராஞ்சியில் தனது இராணுவப் பயிற்சியை முடித்து ஆகஸ்ட் 1942ல் சீக் ரெஜிமென்டில் இணைந்து தனது பணியை தொடங்கினார்.
ஆகச் சிறந்த விளையாட்டு வீரராக வலம் வந்த அவய்  pole vault மற்றும் நீளம் தாண்டுதலில் சிறந்து விளங்கினார்.இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்தமையால் பிரிட்டிஷ் அரசு அவருக்கு மிலிட்டரி மெடல் வழங்கியது.
மிலிட்டரி மெடல்
இரண்டாம் உலகப் போரின் போது  பர்மா போர்முனையில் ஜப்பானியர்களுக்கு எதிரான போரில் கலந்து கொண்டிருந்தார்.பர்மியக் காடுகளில் ஜப்பானியர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.அவரது வீரம் மற்றும் திறமை காரணமாக அவருக்கு 1944ல் மிலிட்டரி மெடல் வழங்கப்பட்டது.
இந்தியா பாக் போர் : அக் 1948
1947 சுதந்திரத்திற்கு பிறகு காஷ்மீருக்காக முதல் போரை தொடங்கியது பாகிஸ்தான்.போரின் முதல் காலக்கட்டத்தில் பாகிஸ்தானின் பழங்குடி பயங்கரவாத படைகள் எல்லையை தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்து பல இடங்களை ஆக்கிரமித்தன.அதில் ஒன்று தான் டித்வால் என்கிற இடம்.குப்வாரா செக்டாரில் இருந்த டித்வால் என்னும் கிராமம் இராணுவ பார்வையில் பாதுகாப்புக்கு மிக முக்கியமான இடம்.
23 மே 1948ல் இந்திய இராணுவம் டித்வாலை பாக் படைகளிடமிருந்து மீட்டது.பாகிஸ்தான் படைகளுக்கு வேறு வழியின்றி பின்வாங்கின.ஆனால் டித்வாலை சண்டையிடாமல் விட்டு விட மனமில்லாத பாக் மீண்டும் டித்வாலை கைப்பற்ற முனைந்தது.
டித்வாலை கைப்பற்றுவதற்கான சண்டை ஒரு மாதம் நடைபெற்றது.தெற்கு டித்வாலில் இருந்த ரிச்மர் கலி மற்றும் கிழக்கு டித்வால் பகுதியில் இருந்த நஸ்டசூர் பாஸ் இரண்டையும் கைப்பற்றுவதில் பாக் குறியாக இருந்தது.இதற்காக ஒரு பிரிகேடு வீரர்களுடன் ஆர்டில்லரிகளை அனுப்பி அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்க தயாரானது.
13 அக்டோபரில் தாக்குதலை தொடங்கியது பாக்.இந்திய நிலைகளை தாக்கி அழித்து டித்வாலை சுற்றி கைப்பற்றுவது பாக்கின் திட்டம்.இந்நிலையில் ரிச்மர் கலி பகுதியில் இருந்த முன்புற எல்லை நிலையில் 1 சீக் படைக்கு தலைமை வகித்திருந்தார் லான்ஸ் நாய்க் கரம் சிங் அவர்கள்.
அவர்களில் பத்து வீரர்களுக்கு நம் பக்கம் ஒருவர் என்ற பலத்தோடு பாக் கடும் தாக்குதலை தொடங்கியது.நம் தொலைத்தொடர்பு சாதனங்கள் அழிக்கப்பட்டன.கடும் ஆர்டில்லரி தாக்குதலை நடத்தியது பாக்.இருந்தும் நமது வீரர்கள் வீரத்தோடு செயல்பட்டு பாக் தாக்குதல்களை ஒன்றன் பின் ஒன்றாக முறியடித்தனர்.ரிச்மர் கலியில் லான்ஸ் நாய்க் கரம் அவர்களின் நிலையை கைப்பற்ற 8 முறை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான்.
இந்த நேரத்தில் நம் வீரர்களின் வெடிபொருட்கள் முடிந்து போக லா/நா தன் வீரர்களை மெயின் கம்பெனி வீரர்களோடு இணைந்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.இந்த தாக்குதலில் மேலதிக படைகளை எதிர்பார்க்க முடியாது என கரம் சிங் அவர்கள் அறிந்திருந்தார்.தனது மற்றொரு வீரர் துணையோடு காயம்பட்ட இரு வீரர்களை தன்னலமற்று பத்திரமாக மீட்டார்.இந்த நேரத்தில் லா/நா கரம் சிங் அவர்களும் காயமடைந்திருந்தார்.
அவர் காயமடைந்திருந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தது.இதை உடைத்து முன்னேறுவது கடினம்.ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு கிரனேடுகளை எதிரிகள் மீது வீசியவாறே சென்று வீரர்களை ஊக்கப்படுத்தி அவர்களை உற்சாகமூட்டினார்.நமது வீரர்கள் பின்வாங்கவில்லை.இந்நிலையில் அவருக்கு இரண்டாம் முறையாக காயம் பட்டிருந்தது.ஆனால் அவர் தான் மீட்கப்படுவதை விரும்பவில்லை.முதல் முன்னனி நிலைகளை அவர் விட்டுவிட விரும்பவில்லை.அவர் விட்டுவிட்டால் அந்த பங்கர்களை எதிரிகள் கைப்பற்றி நம் இரண்டாம் நிலைகள் மீது பாதுகாப்பாக தாக்குதல் நடத்த முடியும்.ஆனால் இதற்கு வாய்ப்பளிக்க கூடாது என்பது கரம் சிங் அவர்கள் உறுதியோடு இருந்தார்.
இந்நிலையில் ஐந்தாம் முறையாக தாக்குதல் நடத்தி கரம் சிங் அவர்களினா நிலையை பாக் வீரர்கள் நெருங்கிவிட , தனது பங்கரில் இருந்து வெளியே குதித்த சிங் அவர்கள் இரு பாக் வீரர்களை கையால் தாக்கி சண்டையிட்டு பின் தன் துப்பாக்கி முறை கத்தியால் அவர்களை குத்தி வீழ்த்தினார்.அவரது வேகத்தால் உந்தப்பட்ட நமது வீரர்கள் மிக உந்துதலோடு எதிரிகளை தாக்கினர்.
இதற்கு பிறகும் பாக் படைகள் மேலும் மூன்று முறை நிலையை கைப்பற்ற முயற்சி செய்து தாக்கின.நமது வீரர்கள் அவற்றையும் வெற்றிகரமாக  முறியடித்தனர்.13 அக்டோபர் இரவு நமது சீக் படை 15 வீரர்களை இழந்திருந்தது.பாக் பக்கம் கடும் இழப்பு.300 எதிரிகள் வீழ்த்தப்பட்டனர்.எட்டு முறை முயன்றும் ஒரு பங்கரை கூட பாக் வீரர்களால் கைப்பற்ற முடியவில்லை.முடிவில் எதிரிகள் பின்வாங்கினர்.
அவரது தன்னலமற்ற வீரம்,தைரியம்,சிறந்த தலைமைப் பண்பு, சக வீரர்களுக்கு உதவிய குணம் காரணமாக அவருக்கு இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
அவரது தலைமைப்பண்பு மற்றும் சகவீரர்களின் பெரும் வீரம் காரணமாக போரின் வழி மாறி டித்வால் காப்பாற்றப்பட்டது.
சுபேதாராக படையில் பணியாற்றி அதன் பின் கௌரவ கேப்டன் பதவி வழங்கப்பட்டு படையில் இருந்து ஓய்வு பெற்றார்.
20 ஜீன் 1993ல் தனது 77வது அகவையில் அவர் இயற்கை எய்தினார்.
1980களில் இந்திய கப்பல் அமைச்சகம் வாங்கிய 15 க்ருடு எண்ணெய் கப்பல்களுக்கு பரம்வீர் சக்ரா வீரர்களின் பெயரை சூட்டியது. MT Lance Naik Karam Singh எனப் பெயரிடப்பட்ட டேங்கர் கப்பல் 1984ல் இணைந்து 25 வருடங்கள் பணியாற்றியது.
அவர் பிறந்த சங்ரூர் மாவட்ட நிர்வாக கட்டிடத்தில் அவருக்கென ஒரு நினைவு வளாகத்தை அரசு கட்டியுள்ளது.
© இந்திய இராணுவச் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.