இந்தியாவுக்கு 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான கப்பல்களை கட்ட ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள துருக்கி நிறுவனம் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து பாதுகாப்புக் காரணங்களை கருதி அந்த ஒப்பந்தத்தை தொடருவது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவுக்கு 45 ஆயிரம் டன்கள் எடையுள்ள 5 போர்க் கப்பல்களை விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஷிப் யார்டு நிறுவனத்தில் கட்டுவது தொர்டர்பான டெண்டர் கடந்த ஜூன் மாதம் விடப்பட்டது. இதில் குறைந்த தொகையைக் குறிப்பிட்டதன் மூலம் துருக்கியின் டி.ஏ.ஐ.எஸ். கப்பல் கட்டும் நிறுவனம் தேர்வு பெற்றது.
இந்நிலையில் இந்த நிறுவனம் பாகிஸ்தான் கடற்படைக்காகவும் அதிக அளவில் போர்க் கப்பல்களை வழங்குவது தெரியவந்துள்ளதையடுத்து இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை அனுமதிப்பதில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுப்பப்பட்டுள்ளன.
ஹிந்துஸ்தான் ஷிப் யார்டு நிறுவனத்துக்கு அருகில் தான் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் தளம் மற்றும் கிழக்கு கடற்படை தலைமையகம் அமைந்துள்ளன.
மேலும் பாகிஸ்தானுக்காக 4 போர்க்கப்பல்களையும் 30 டி 123 ரக போர் ஹெலிகாப்டர்களையும் தயாரித்துக் கொடுக்க இந்த நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதையடுத்து இந்தியத் தரப்பில் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவிர காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் இந்திய எதிர்ப்பும் ஒரு காரணமாகிறது.