நீர்மூழ்கி ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா அறிவிப்பு

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவித் தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

புஹுசாங்-3 (Pukguksong-3) எனப்படும் இந்த நீர்மூழ்கி ஏவுகணை, வடகொரியாவில் வோன்சன் நகருக்கு அருகே கடற்பகுதியில் சோதித்துப் பார்க்கப்பட்டதை தென்கொரிய ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.

வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா கூறியுள்ளது. 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தொடங்கிய பிறகு, வடகொரியா மேற்கொண்டவற்றில் மிகவும் ஆத்திரமூட்டக் கூடிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதவலிமையை பெருக்குவதை உணர்த்தும் வகையிலேயே வடகொரியா தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர்மூழ்கி ஏவுகணை சோதனையை நடத்திய விஞ்ஞானிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வாழ்த்து அனுப்பியுள்ளதாக வடகொரிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வழக்கமாக இத்தகையை ஆயுத சோதனைகளை நேரில் பார்வையிடும் கிம் ஜோங் உன், நீர்மூழ்கி ஏவுகணை சோதனை தொடர்பான நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதையே, அவர் வாழ்த்து அனுப்பிய செய்தி காட்டுவதாக வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Polimer

Leave a Reply

Your email address will not be published.