காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் – ராணுவ அதிகாரி வீரமரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் – ராணுவ அதிகாரி வீரமரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவுசாரா பிராந்தியத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு 500 மீட்டர் தொலைவில், ராணுவ அதிகாரி மற்றும் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (ஜே.சி.ஓ) ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த கூடுதல் ராணுவபடைகள் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். அங்கு அவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.இதில் மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளின் நான்கு முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு உதவி செய்யும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்பட்டார். அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.