இஸ்ரோ விஞ்ஞானி மர்மமான முறையில் மரணம்; நடந்தது கொலையா?

தலையில் பலத்த காயத்துடன் சுரேஷ் சடலமாகக் கிடந்தார். கனமான பொருள் கொண்டு தலையில் அடித்தது போன்ற காயத்துடன் சுரேஷின் உடல் கண்டெடுப்பு.

ஹைதராபாத்: இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையத்தில் பணிபுரிந்து வந்த விஞ்ஞானி ஒருவர் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் சுரேஷ் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திரா சென்னையில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றுகிறார்.
56 வயதான சுரேஷ் ஹைதரபாத் அமீர்பேட்டை பகுதியில் உள்ள அன்னபூர்ணா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அவர் பணிக்கு வராததால் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், சுரேஷ் அழைப்பை எடுக்கவில்லை.
இதையடுத்து சென்னையில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் சுரேஷை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போதும் சுரேஷ் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் பதட்டமடைந்த மனைவி இந்திரா ஹைதராபாத் காவல்துறையின் உதவியை நாடினார். சுரேஷ் வசித்த வீட்டின் கதவை காவலர்கள் உடைத்து உள்ளே நுழைந்தபோது அதிர்ச்சிக்குள்ளாகினர்.
தலையில் பலத்த காயத்துடன் சுரேஷ் சடலமாகக் கிடந்தார். கனமான பொருள் கொண்டு தலையில் அடித்தது போன்ற காயத்துடன் இருந்த சுரேஷின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார் சுரேஷ். அவரது மனைவியும் உடன் வசித்து வந்த நிலையில் கடந்த 2005-ஆம் ஆண்டு சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இத்தம்பதிக்கு அமெரிக்காவில் ஒரு மகனும் டெல்லியில் ஒரு மகளும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.