சிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை

மத்திய கிழக்கு நாடான சிரியாவின் எல்லையை ஒட்டியுள்ள முக்கிய நகரை கைப்பற்றியதாக துருக்கிப் படைகள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு நாடான சிரியாவை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியிருந்தது. ஐ.எஸ்., அமைப்புக்கு எதிராக, அமெரிக்கப் படைகள் போரில் இறங்கின. அப்போது, சிரியாவின் வடக்கு பகுதியில் வலுவாக உள்ள, குர்து இன மக்களின், சிரிய ஜனநாயகப் படை, அமெரிக்காவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டது.

இந்த நிலையில், சிரியாவில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுவதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். குர்து மக்களை, அதன் அண்டை நாடான துருக்கி, பயங்கரவாதிகளாக அறிவித்திருந்தது. சிரியாவின் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என, துருக்கி அறிவித்தது.

அதன்படி, கடந்த சில நாட்களாக, சிரியாவின் வடக்கு பகுதிகளை குறிவைத்து, துருக்கிப் படைகள் முன்னேறி வருகின்றன.சிரியாவின் மிக முக்கியமான, ராஸ் அல்அயன் நகரைக் கைப்பற்றி உள்ளதாக, துருக்கிப் படைகள் அறிவித்துள்ளன. வான்வெளி தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல் மூலம், இந்த நகரை கைப்பற்றியுள்ளதாக, துருக்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில், சிரியாவின் வடக்கு பிராந்தியத்தில் இருந்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், அச்சத்தின் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையே, துருக்கியுடன் செய்துள்ள ஒப்பந்தங்களின்படி அளிக்க வேண்டிய ஆயுதங்கள், ‘சப்ளை’யை நிறுத்தி வைப்பதாக, ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அறிவித்துள்ளன.kurdஇன மக்கள் வலுவாக உள்ள பகுதியில், துருக்கி படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள, குர்து படைகளுக்கு எதிரான படைகள், துருக்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

சிரியாவின் டால் அப்யாட் நகரில், ஒன்பது அப்பாவி பொதுமக்களை, இந்தப் படைகள் கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்., ஆதரவு

சிரியா மீது துருக்கி படையெடுத்துள்ளதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘துருக்கியின் நடவடிக்கைகள், சிரியாவில் மீண்டும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தலைதுாக்க உதவிடும்’ என, உலக நாடுகள் எச்சரித்துள்ளன

இந்த நிலையில், துருக்கிக்கு ஆதரவு அளிப்பதாக பாக்., அறிவித்துள்ளது. துருக்கி அதிபர், ரெசப் தயீப் எட்ராகனுடனான தொலைபேசி பேச்சின்போது, துருக்கியின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.எட்ராகன், இம்மாத இறுதியில், பாக்.,குக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinamalar

Leave a Reply

Your email address will not be published.