அமெரிக்கர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக, சிரியாவில் அமெரிக்க ராணுவ தளத்திற்கு அரணாக இருக்கும் குர்து படைகள் வேதனை தெரிவித்துள்ளன.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்க வீரர்களுடன் இணைந்து குர்து படைகள் போரிட்டன. இந்நிலையில், தனது எல்லையோரத்தில் குர்து படைகளின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களது எல்லையில் தீவிரவாத கட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்காக இந்த தாக்குதலை நடத்துவதாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகான் கூறியுள்ளார். இந்த குர்து-துருக்கி சண்டையில் தலையிடப்போவதில்லை என அமெரிக்கா விலகிக் கொண்டுள்ளது.
சண்டை நடைபெறும் எல்லைப் பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்கர்கள் தங்களுக்கு துரோகமிழைத்துவிட்டனர் என்றும், துருக்கி படைகளுக்கு எதிரான சண்டையில் அவர்கள் உதவுவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றும் குர்து படையினர் கூறியுள்ளனர். இந்த சண்டை நடைபெறும் பகுதியில் இருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேறிவிட்ட போதிலும் சிரியாவின் வடபகுதி உள்ளிட்ட பிற பகுதிகளில் அமெரிக்க வீரர்கள் உள்ளனர். வடபகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்கும் அரணாக எஸ்டிஎஃப் எனப்படும் குர்து படைகள் உள்ளன.
சிரியாவில் அமெரிக்க வீரர்கள் யாரும் இல்லை என அதிபர் டிரம்ப் கூறியிருந்தபோதிலும், சுமார் ஆயிரம் அமெரிக்க வீரர்கள் அங்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, குர்து படைகளை கைவிட்டுவிடவில்லை என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். ஆனால் குர்துகளுக்கும் துருக்கியர்களுக்கும் இடையிலான சண்டையில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்றும் எஸ்பர் கூறியுள்ளார். துருக்கி எல்லைப் பகுதியிலிருந்து விலகியிருந்தாலும், சிரியாவின் பிற பகுதிகளில் குர்து படைகளுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Polimer