சிரியா எல்லையில் துருக்கி தாக்குதல்

சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது. 
துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஸ்தான் என்று அவர்கள் அழைத்துக் கொள்கின்றனர்.
ஒய்.பி.ஜி. எனப்படும் குர்தீஷ் மக்கள் பாதுகாப்புப் பிரிவு என்ற அமைப்பு தான் 3 கோடி குர்துக்களை பாதுகாக்கிறது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்த அமைப்பு பெரும் பங்கு வகித்தது.
அமெரிக்க நாட்டுத் துருப்புகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டியது ஒய்.பி.ஜி., அமைப்பு. சிரியாவில் நிலைமை இப்படி இருக்க, துருக்கியில், குர்துக்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது. மேலும் தனி தேசம் கேட்கும் குர்துக்கள் தங்கள் நாட்டிலும், தங்கள் நாட்டின் எல்லை அருகேயும் இருப்பதை துருக்கி விரும்பவில்லை.
குர்துக்களின் தனி தேசியத்தை விரும்பாத துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் குர்துக்கள் போராளிகள் குழுவின் ஆதரவுடன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஸ்தான் வொர்க்கர்ஸ் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.
எல்லையோரம் உள்ள குர்து இனப் போராளிகளை தீர்த்தக் கட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது.
தங்கள் நாட்டு துருப்புகளை சிரியாவில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்த டிரம்ப், அதே வேளையில், குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி போர் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத துருக்கி அரசு, குர்து இனப் போராளிகளுக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளது.
புதன் கிழமை இரவில் சிரியாவின் ரஸ் அல் அயின் நகரை நோக்கி, துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது. டல் அப்யத், சரி கனி ஆகிய நகரங்களில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த நகரங்கள் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.
உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை ஒய்.பி.ஜி. போராளிகள் குழுக்களின் 181 நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.
சிரியாவின் எல்லையை ஒட்டிய அக்காக்கலே என்ற இடத்தில் ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. குர்து போராளிகள் குழுக்களுக்கு எதிராக துருக்கி தொடங்கியுள்ள இந்தப் போரால், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Polimer

Leave a Reply

Your email address will not be published.