எல்லைப் பாதுகாப்புப் படையினர் குஜராத்தின் கட்ச் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 ஆளில்லா மீன்பிடிப் படகுகளைக் கைப்பற்றினர்.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் குஜராத் மாநிலத்தை ஒட்டிய கடல் எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு ரோந்து மற்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு கட்ச்சில் உள்ள ஹராமி நலாப் பகுதியில் படகுகளின் எஞ்சின் சத்தம் கேட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்ததாக அவர்கள் கூறினர்.
ஆனால் அங்கு 5 மீன்பிடிப்படகுகள் மட்டுமே இருந்ததாகவும் அதில் மீனவர்கள் எவரும் இல்லை என்றும் தெரிவித்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர், தங்கள் படகுகள் வரும் சத்தம் கேட்டு அவர்கள் படகுகளை விட்டுவிட்டு பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்று கூறினர்.
ஒற்றை எஞ்சின் கொண்ட 5 மீன் பிடி படகுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நடைபெற்ற சோதனையில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் சிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பகுதியில் இதுவரை மொத்தம் 8 படகுகள் கைப்பற்றபட்டதாகவும், நில எல்லையில் 4 பேர் கடல் எல்லையில் இருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் எல்லைப்பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Polimer