இந்தியாவும் பாகிஸ்தானும் அணுஆயுதப் போரில் ஈடுபட்டால் 12.5 கோடிமக்கள் உடனடியாக பலியாகக் கூடும், மேலும் இதனால் உலகம் திடீர் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்குத் தள்ளப்பட்டு உலகளாவிய காலநிலை பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்லைக்கழகமும் நியூ நியூ பிரன்சுவிக் நிறுவனமும் இணைந்து ஈடுபட்ட ஆய்வின் முக்கிய அம்சங்களை ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
சயின்ஸ் அட்வான்சஸ் வெளியிட்டுள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
“போரில் வீசப்படும் இதுபோன்ற வெடிகுண்டுகள் குறிவைக்கப்படக் கூடிய இடங்களை மட்டுமல்ல, முழு உலகையும் அச்சுறுத்தும். 2025 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது.
இரு அண்டை நாடுகளும் காஷ்மீர் மீது பல போர்களை நடத்தியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டளவில் 400 முதல் 500 அணு ஆயுதங்களை மொத்தமாக வைத்திருக்க முடியும்.
வெடிக்கும் அணு ஆயுதங்களிலிருந்து 16 முதல் 36 மில்லியன் டன் புகைக்கரியை வெளியேறும். இதனால் பூமியை அடையும் சூரிய ஒளி 20 முதல் 35 சதவீதம் வரை குறையும். மழைப்பொழிவு 15 முதல் 30 சதவீதம் வரை குறையக்கூடும். இதனால் தாவர உற்பத்தி குறைந்து உணவு உற்பத்தியும் வீழ்ச்சியடையும்.
இந்தத் தாக்கங்களில் இருந்து மீள பத்து வருடங்களுக்கும் மேலாகும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் ஒன்பது நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டுமே தங்கள் ஆயுதங்களை நாளுக்குநாள் விரைவாக அதிகரித்துக்கொண்டு வருகின்றன.
இரு அணு ஆயுத நாடுகளுக்கிடையில், காஷ்மீர் மீது தொடர்ச்சியான செலுத்திவரும் அமைதியின்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அதனையொட்டி உருவாகும் அணுஆயுதப் போரின் கடும் விளைவுகளைப் புரிந்துகொள்வது முக்கியமானது.
இந்தியா பாகிஸ்தான் இடையே 2025 ஆம் ஆண்டில் அணு ஆயுதப் போர் ஏற்படும் சூழ்நிலையில் அவர்கள் வீசும் குண்டுகள் 15 கிலோ டன் முதல் சில நூறு கிலோ டன்கள் வரை வெடிக்கும் சக்தியைக் கொண்டிருக்கும். அதாவது 1945ஆம் ஆண்டில் அமெரிக்கா ஹிரோஷிமா மீது குண்டு வீசிய அதே அளவு – இருக்கலாம்.
இந்த சூழ்நிலையில், நேரடி விளைவுகளால் 5 முதல் 12.5 கோடி மக்கள் இறக்கக்கூடும். இதன் தொடர்ச்சியாக உலகெங்கும் வெகுஜன பட்டினியால் கூடுதல் இறப்புகள் ஏற்படக்கூடும்.
இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The hindu