10 லட்சம் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் கடந்த வாரம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வடக்கு சிரியாவில் தனது படைகளை வாபஸ் பெற்றது அமெரிக்கா. சிரியாவில் துருக்கிப் படையினரும் ஆறாவது நாளாகத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். துருக்கியின் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், சிரிய அகதிகள் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “கடவுளின் உதவியுடன், மிகக் குறுகிய காலகட்டத்திற்குள்ளாக எங்கள் எல்லையை ஈராக் வரை பாதுகாப்பாக மாற்றுவோம். முதல் படியாக 10 லட்சம் அகதிகள் நாடு திரும்ப உள்ளனர். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள லட்சக்கணக்கான சிரிய அகதிகளும் நாடு திரும்ப உள்ளனர்” என்று தெரிவித்தார்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
The Hindu