ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை வினியோகிக்கும் பாகிஸ்தான் – திடுக்கிடும் தகவல்கள்

ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை  Unmanned aerial vehicle பாகிஸ்தான் வினியோகித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் அதிரடியாக நீக்கியது. அதுமட்டுமின்றி அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்தும், ஆயுதங்களை வினியோகித்தும் நாசவேலைகளை நடத்தி வந்த பாகிஸ்தானுக்கு இது பேரிடியாக அமைந்தது.

இனி இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக என்ன செய்வது என யோசித்த பாகிஸ்தான், அடுத்த கட்டத்துக்கு சென்று இருக்கிறது. ஆளில்லா விமானங்களை கொண்டு ஆயுதங்களை கடத்தலாம் என்ற முடிவுக்கு அந்த நாடு வந்து இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பஞ்சாப் மாநிலம், தார்தரன் மாவட்டம், சோலா சாகிப் கிராமத்தில் 4 பயங்கரவாதிகள் போலீஸ் படையிடம் சிக்கினர். அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவைப் பெற்ற காலிஸ்தான் ஜிந்தாபாத் படை என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த பயங்கரவாத இயக்கத்தின் நோக்கம், பஞ்சாப்பிலும், அண்டை மாநிலங்களிலும் நாச வேலைகளில் ஈடுபடுவதாகும்.

அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள்-5, நூற்றுக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்கள், தோட்டா உறைகள், சீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், செயற்கை கோள் தொலைபேசிகள், செல்போன்கள், வயர்லஸ் செட்டுகள், ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் மூலம்தான் ஆயுதங்கள் கொண்டு வந்து போடப்படுகின்றன என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதை பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் பறந்து வந்து ஆயுதங்களை, வெடிபொருட்களை போட்டுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன. அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தபின்னர் பாகிஸ்தான் பின்பற்றி வரும் புதிய, தீவிரமான பரிமாணம் இது. இந்த ஆளில்லா விமான பிரச்சினைக்கு அமித் ஷா கூடிய விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என கூறி இருக்கிறார்.

இதுபற்றி பஞ்சாப் போலீஸ் டி.ஜி.பி. டிங்கர் குப்தா கூறும்போது, “பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.தான், ஆயுதங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் கொண்டு வந்து போடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஐ.எஸ்.ஐ. கட்டளையின்படி காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அதிக அளவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்வது பஞ்சாப், காஷ்மீர், எல்லைப்பகுதிகளிலும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்குத்தான்” என்று குறிப்பிட்டார்.

சதித்திட்டத்தின் சர்வதேச தொடர்புகள் பற்றி விசாரிப்பதற்காக இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ.யிடம் ஒப்படைக்க பஞ்சாப் போலீஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.