ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், 60 பயங்கரவாதிகளை எல்லையில் ஊடுருவச் செய்ய, பயன்பாட்டில் இல்லாத பாதைகளை, பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தி வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா – பாக்., இடையே, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பாக்., ராணுவத்தின் உதவியுடன், இந்திய பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதல்கள் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து, எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: உயர்ந்த மலைப்பிரதேசங்களான குரேஸ், மாச்சில், குல்மார்க் பகுதிகள் வழியாக காஷ்மீருக்குள்ளும், பூஞ்ச், ரஜோரி வழியாக, ஜம்முவுக்குள்ளும் ஊடுருவ, பயங்கரவாதிகள் முயற்சித்தை, உளவு அமைப்புகள், பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்து உள்ளன. இதில் சில முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அதையும் மீறி சிலர் ஊடுருவி இருக்கலாம். புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாபா ரெஷி மற்றும் புட்காம் மாவட்டங்களில், சில பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள கந்தர்பால் பகுதியில், சில புதிய ஆட்களின் நடமாட்டம் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், காகா மலைப்பகுதி வழியாக, சோபியான் மாவட்டத்திற்குள், சிலர் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த பாதை வழியாக, 2003 வரை, பயங்கரவாதிகள் ஊடுருவல் நிகழ்ந்தது. ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பிறகு, இந்த பாதை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இது போன்ற, பயன்பாட்டில் இல்லாத பாதைகள் வழியாக, பாக்., ராணுவத்தின் உதவியுடன், ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவ, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Dinamalar