பயங்கரவாதி ஹபீஸ் சையத்தின் அடிப்படை செலவுகளுக்கு பணம் எடுக்க அனுமதி

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அடிப்படை செலவுக்கு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத், 2008-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 167 அப்பாவி மக்கள் பலியான வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஐ.நா. சபையில் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சமீபத்தில் ஹபீஸ் சயீத் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவரது வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டன.

ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானத்தின்படி பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கை தடை செய்துள்ளது. இந்தநிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் அரசு தரப்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதில் ஹபீஸ் சையத் மற்றும் அவரது குடும்பத்திற்கும் தேவையான அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட, வங்கி கணக்கில் உள்ள நிதியை எடுக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஐ.நா. தீவிரவாத எதிர்ப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. அடிப்படை செலவுகளுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள மட்டும் பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.