காஷ்மீர் எல்லைப் பகுதியில் நுழைய முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பதற்றம் நீடித்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி காஷ்மீரின் குப்வாரா எல்லைப்பகுதியில் நுழைய முயன்றதை ராணுவத்தினர் தடுத்தது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி காஷ்மீரின் குப்வாரா எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் நுழைய முயற்சி செய்தனர். அப்போது இந்திய ராணுவ வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைவதை தடுத்து விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இந்தியா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.