தொடரும் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அத்துமீறல்..!

பாகிஸ்தான் இந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்து 50க்கும் அதிகமான முறை எல்லை தாண்டி அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்நாட்டுப் படைகள் அப்பாவி மக்களை குறி வைத்து தாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஐ.நா. மனித உர்மை கவுன்சிலில் பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ள நிலையில் பாகிஸ்தான் ஆதாரமற்ற பிதற்றல்களை முன்வைப்பதாகவும், இந்திய உள்நாட்டு விவகாரமான காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அந்த நாட்டுக்கு உரிமை இல்லை என்றும் இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் ஊடுருவலுக்கு ஏதுவாக பாகிஸ்தானின் தொடர் எல்லை தாண்டிய தாக்குதல்கள் தொடர்பாக ஐ.நா.வில் இந்தியத் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்திய நிலைகள் மட்டுமன்றி அப்பாவி மக்களும் குறிவைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் மட்டும் 2050-க்கும் மேற்பட்ட முறை எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் இதில் 21 அப்பாவிகள் பலியாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லை நெடுகிலும் 2003-ஆம் ஆண்டு மெற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பலன் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியப் படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து வரும் நிலையில் பாகிஸ்தானின் அத்துமீறல் தாக்குதலையும், தீவிரவாத ஊடுருவல்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலை இருப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.