Breaking News

அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் கந்தேரி, நாட்டுக்கு அர்ப்பணிப்பு

அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

1500 டன்னுக்கும் அதிக எடை கொண்ட, டீசல் அல்லது பேட்டரியில் இயங்கக் கூடிய, தாக்குதலுக்கு பயன்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஸ்கார்ப்பீன் ரகத்தை சேர்ந்தவை. இந்த ரகத்தை சேர்ந்த முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி (INS Kalvari), இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் அர்ப்பணிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்கார்ப்பீன் ரகத்தில் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது. மும்பையில் இந்திய கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ஐஎன்எஸ் கந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை இணைத்திருப்பதன் மூலம் இந்திய கடற்படையின் வலிமை மேலும் பெருகியிருப்பதாகக் குறிப்பிட்டார். கடலுக்கு அடியில் வேட்டையாடும் திறன்பெற்ற கத்திப் பல் மீன்களின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பலுக்கு கந்தேரி என பெயரிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

எதிரிகள் வாலாட்டினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தானை அவர் எச்சரித்தார். ஜம்மு-காஷ்மீரில் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை உலகமே ஆதரிப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானோ ஒவ்வொரு நாட்டுக் கதவையும் தட்டி, கேலிச் சித்திரத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.

நீர்மூழ்கிக் கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்ததைத் தொடர்ந்து, நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்று அதை பார்வையிட்டார். நீர்மூழ்கிக் கப்பலின் திறன்களை அதிகாரிகள் ராஜ்நாத் சிங்கிற்கு விளக்கினர். அப்போது கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கும் உடனிருந்தார்.

தாக்குதலுக்கு பயன்படும் ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி, நீரின் பரப்பில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்திலும், நீருக்கடியில் மணிக்கு 37 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கக்கூடியது. தொடர்ச்சியாக 12 ஆயிரம் கிலோமீட்டர், அதாவது 6 ஆயிரத்து 480 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு பயணிக்கக் கூடியது. 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் டீசலிலும், பேட்டரியிலும் இயங்கக் கூடியது.

தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு, 350 மீட்டர் ஆழத்தில் மூழ்கியபடியே பணியில் ஈடுபடும். இந்த நீர் மூழ்கிக் கப்பலில் 8 அதிகாரிகளும் 35 மாலுமிகளும் இருப்பர். டார்ப்பிடோ (torpedoe) எனப்படும், நீருக்கடியில் இருந்தும் பயன்படுத்த தக்க எஸ்யூடி ரக குண்டுகள், ரேடார் மற்றும் அகச்சிவப்பு கதிர் கருவிகளால் கண்டறியப்பட முடியாத வகையில், கப்பல்களை தாக்கக் கூடிய Exocet ஏவுகணைகள் இந்த நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டிருக்கும்.

எதிரிகளின் கப்பல்களை தகர்க்கக்கூடிய கடல் கண்ணிவெடிகளையும் ஏந்திச் செல்லும் திறன்பெற்றது இந்த நீர்மூழ்கிக் கப்பல். தாக்குதலுக்கு மட்டுமின்றி, எதிரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி உளவு பார்ப்பதற்கும், கடல் கண்ணிவெடிகளை வைப்பதற்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயன்படும்.

இதேபோல மேலும் 4 ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன. நேவல் குரூப் என்ற பிரான்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பில், இந்திய பொதுத்துறையை சேர்ந்த Mazagon Dock கப்பல் கட்டுமான நிறுவனத்தால் மும்பையில் கட்டப்பட்டு வருகின்றன.

Polimer

Leave a Reply

Your email address will not be published.