ஸ்குவாட்ரான் லீடர் அஜ்ஜமடா போப்பய்யா தேவய்யா

ஸ்குவாட்ரான் லீடர் அஜ்ஜமடா போப்பய்யா தேவய்யா
1965 இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றுகொண்டிருந்த சமயம்.நமது விமானப்படைக்கு சோதனை காலம் தான்.நமது விமானப்படைக்கு இழப்பு அதிகம்.அதற்கு காரணமும் உள்ளது.ஏனெனில் அந்த நேரத்தில் இந்தியா இயக்கிய விமானங்களை விட பாகிஸ்தான் நவீன விமானங்களை இயக்கியது.பாகிஸ்தான் எப்-104 விமானம் இந்த பிராந்தியத்தின் முதல் சூப்பர்சோனிக் விமானமாக இருந்தது.1954 முதல் 1964 வரை நிதி உதவிகள் என்ற பெயரில் பாகிஸ்தான் 1.5பில்லியன் டாலர்கள் வரை பெற்று தனது இராணுவத்தை வலிமைப்படுத்தியிருந்தது.இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகை.
அதே நேரத்தில் இந்திய தலைவர்கள் இந்திய இராணுவத்தை சீரமைத்து நவீனப்படுத்துதலில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.அந்த காலத்தில் இந்திய விமானப்படையின் மூன்றில் ஒரு பங்கு விமானம் இரண்டாம் உலகப் போர் காலத்திலானது.460 புதிய எம்-47 மற்றும் எம்-48 டேங்குகள்,கடற்படைக்கு கண்ணிவாரிகப்பல்கள்,நாசகாரிகப்பல்கள்,நீர்மூழ்கிகள் மற்றும் விமானப்படைக்கு 120 எப்-86 சேபர் விமானங்கள் மற்றும் புதிய சூப்பர்சோனிக் எப்-104 விமானங்கள் மற்றும் இந்த விமானங்களில் புதிய வான்-வான் தாக்கும் சைடுவின்டர் ஏவுகணைளும் இணைக்கப்பட்டிருந்தன.
தென்னாசியாவில் பாகிஸ்தான் தான் இவற்றை முதல் முறையாக பெற்றிருந்தது.
இந்தியா அதிக அளவில் விமானங்கள் இழந்திருந்தது.காரணம் தளத்தில் இருந்த விமானங்கள் பாகிஸ்தானால் தாக்கப்பட்டதே.ஆனால் நேருக்கு நேரான வான் சண்டையில் இந்தியா 14 மட்டுமே இழந்திருந்தது.பாகிஸ்தான் 18 விமானங்களை இழந்திருந்தது.
தேவய்யா டிசம்பர் 24 , 1932ல் கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்தில் பிறந்தார்.1954ல் விமானப்படையில் இணைந்த அவர் 1965 போர் தொடங்கி நேரத்தில் விமானப்படை கல்லூரியில் பயிற்சியாளராக இருந்தார்.பின்பு டைகர் ஸ்குவாட்ரானில் மாறுதல் பெற்று போரின் போது மிஸ்டியர் விமானத்தில் பறந்தார்.
இந்நிலையில் தான் பாகிஸ்தானின் சர்கோதா தளத்தை தாக்க விமானப்படை தனது விமானங்களை அனுப்பியது.7 செப் 1965 க்கு விமானங்கள் பறந்தன.
தாக்குதலுக்கு சென்ற மற்ற விமானங்கள் தாக்குதல் முடித்து இந்தியாவிற்கு திரும்பின ஒரு விமானம் தவிர.அது ஸ்குவாட்ரான் லீடர் தேவய்யா அவர்களின் மிஸ்டியர் விமானம் மட்டும் திரும்பவில்லை.அவருக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.அரசு அவரை போரில் காணாமல் போனதாக அறிவித்தது.
அதன் பின் பலகாலத்திற்கு பின் தான் என்ன ஆனது என்பது தெரியவந்தது.
தளம் தாக்குதலில் ஈடுபட்டு வெற்றிகரமாக திரும்பும் போது தேவய்யா அவர்களின் விமானத்தை பாகிஸ்தான் எப்-104 விமானம் வழிமறித்தது.எப்-104 விமானம் சூப்பர்சோனிக் விமானம் ஆனால் நமது மிஸ்டியர் ட்ரைசோனிக் விமானம்.
மிஸ்டியரை விட எப்-104 விமானம் வேகமாக பறக்க கூடியது.
வானில் நடைபெற்ற சண்டையில் எப்-104 விமானம் மிஸ்டியரை நோக்கி ஒரு சைடுவின்டர் ஏவுகணையை ஏவியது.மிஸ்டியர் அதில் இருந்து  வெற்றிகரமாக நழுவிச் சென்றது.ஆனால் எப்-104 விமானத்தின் வேகம் காரணமாக அது மிஸ்டியர் விமானத்தின் அருகே வந்து தனது 20மிமீ துப்பாக்கியால் தாக்கியது.இதில் மிஸ்டியர் விமானம் சேதமடைந்தது.ஆனால் அதே நேரத்தில் வேகம் காரணமாக எப்-104 விமானம் மிஸ்டியர் விமானத்திற்கு முன்னதாக சென்றுவிட்டது.சேதமடைந்த விமானமாயினும் தனது முயற்சியால் விமானத்தை செலுத்தி முன்னால் சென்ற எப்-104 விமானத்தில் மோதியதாகவும் அல்லது சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் கூறுகிறது.ஆனால் அவர் எப்-104விமானத்தை வீழ்த்திவிட்டார்.
எப்-104 விமானி தனது பாராசூட் வழியே தப்பித்தார்.ஆனால் தேவய்யா அவர்களின் விமானம் தரையில் மோதி வெடித்து அவர் வீரமரணம் அடைந்தார்.அவரின் உடலை பாகிஸ்தான் கிராம மக்கள் சர்கோதா தளத்தின் அருகே புதைத்ததாக 1979க்கு பின் தகவல் பாகிஸ்தானால் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு 1988ல் விமானப்படைக்கு நடந்த உண்மை தெரிந்து அவரின் தியாகம் மற்றும் வீரத்தை கௌரவிக்கும் பொருட்டு மகாவீர் சக்ரா விருது வழங்கியது.23 வருடங்களுக்கு பிறகு அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
வீரவணக்கம்

ஹவில்தார் ஹங்க்பன் டாடா

ஹவில்தார் ஹங்க்பன் டாடா அசோக சக்ரா

இந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரெஜிமென்டை சேர்ந்த டாடா.1979 அக்டோபர் 2ல் பிறந்தவர்.பின்பு இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் இணைந்து பின்பு
இராஷ்டீரிய ரைபிள்சின் 35வதூ பட்டாலியனில் மாறுதல் பெற்று 2016ல் காஷ்மீர் சென்றார்.

சிறுவயதில் இருந்தே மிகச் சுறுசுறுப்பு.இந்தியாவின் வடகோடி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தின் பொடூரியா கிராமத்தில் பிறந்தார்.காலையிலேயே ஓடுவது,உடற்பயிற்சி ,நீச்சல் என ஒரு வீரராகவே தனது வாழ்வை தொடங்கினார்.இதுவே பின்னாளில் அவர் இராணுவத்தில் இணைவதை எளிதாக்கியது.அவரது வேகத்தை சிறுவயது நண்பர் நினைவு கூர்கிறார்.டாடா இல்லாவிட்டால் நான் அன்றே நீரில் மூழ்கி இறந்திருப்பேன் என அவரது நண்பர் கூறுகிறார்.ஓடும் தண்ணீரில் மூழ்கிய தனது நண்பரை அசாத்தியமாக மீட்டு உயிருடன் கரை சேர்த்துள்ளார் டாடா.

இவ்வாறு நாட்கள் செல்ல,ஒருநாள் தனது பக்கத்து நகரத்தில் இராணுவ ஆட்தேர்வு நடக்க கலந்து கொண்டு வெற்றியும் பெறுகிறார்.

28 அக்டோபர் ,1997ல் பாராசூட் ரெஜிமென்டின் 3வது பட்டாலியனில் இணைந்தார். 2005ல் அஸ்ஸாம் ரெஜிமென்ட் மையத்திற்கு மாறுதல் பெற்று பின் 24 ஜனவரி 2008ல் அஸ்ஸாம் ரெஜிமென்டின் 4வது பட்டாலியனில் இணைந்தார்.

அதன் பிறகு காஷ்மீரில் பணியாற்ற வேண்டி மே 2016ல் அஸ்ஸாம் ரைபிள்ஸின் 35வது இராஷ்டிரிய ரைபிள்சிற்கு மாறுதல் பெற்று குப்வாரா மாவட்டம் சென்றார்.

காஷ்மீர் செல்வதற்கு முன் குடும்பத்தாரிடமும், சர்ச்சில் சென்று பாதிரியாரிடம் நான் காஷ்மீர் செல்கிறேன் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என கூறி விட்டு காஷ்மீரின் குப்வாராவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ள சாபு நிலையில் தனது பணியை தொடங்கினார்.

26 மே 2016 இரவு நேரம் , 35வது இராஷ்டீரிய ரைபிள்சின் சாபு நிலையின் கமாண்டர் டாடா தான். அந்த நிலை 12,500 அடி உயரத்தில் அமைந்திருந்தது.அந்த இரவு நேரத்தில் நௌகமின் சாம்சபாரி மலைப் பகுதியில் நான்கு நன்கு ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் ஊருவியிருந்தனர்.ஊடுருவியிருந்தவர்கள் பற்றிய தகவல் கமாண்டர் ஹவில்தார் டாடா அவர்களுக்கு கிடைக்க தனது சக வீரர்களுடன் அவர்களை தடுக்க கிளம்பினார்.

கண்டிப்பாக இது சாதாரண பணியல்ல.மலைப் பகுதி, கல்லும் கரடும் நிறைந்த பகுதி, 100அடி நடந்தாலே நமது முழு சக்தியும் போய்விடும் நிலை,உயரமென்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை, வேகமாக ஓடமுடியாது. அப்படிப்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் எல்லையின் முன்னனி பகுதியில் தீவிரவாதிகளை வேட்டையாட டாடா கிளம்பினார்.

தீவிரவாதிகளை நெருங்கிய டாடா மற்றும் குழுவினர் அவர்களின் நடமாட்டத்தை கண்டு கொண்டனர்.என்கௌன்டர் தொடங்கியது. கிட்டத்தட்ட 24 மணி நேரம் அந்த என்கௌன்டர் நீடித்திருந்தது. முன்னேறாி பாய்ந்து ஓடினார்.சக வீரரின் கூற்றுப் படி,டாடா மற்ற வீரர்களை விட 350மீ முன்னியில் வேகமாக தீவிரவாதிகளின் பின்னாள்  ஓடினார் என கூறுகின்றார். என்கௌன்டர் தொடங்கயபோது அவர்களை நோக்கி முதலில் இயந்தித் துப்பாக்கியால் சுட்டனர் வீரர்கள்.அதில் இரு தீவிரவாதிகள் மலை மீதும் இரு தீவிரவாதிகள் மலையின் கீழும் ஓடினர்.டாடா அவர்கள் பின்னாள் வேகமாக ஓடி தாக்கினார்.அங்கிருந்த பாறையில் ஔிந்து கொண்டு தீவிரவாதிகளும் கடுமையாக தாக்கினர்.தவழ்ந்து சென்று அருகில் உள்ள பாறையின் வழியாக முதல் தீவிரவாதியை சுட்டார் டாடா..முதல் தீவிரவாதி வீழ்ந்தான்.மேலும் ஒரு தீவிரவாதியை நோக்கி முன்னேறினார்.அந்நேரத்தில் மற்ற வீரர்களும் அங்கு வந்து சேர , நான் முன்னே சென்று தாக்குதல் நடத்துகிறேன்.அந்த சமயத்தில் என்னை கவர் செய்யுங்கள்  (cover fire ) என கூறி தவழ்ந்தவாறு இரண்டாவது தீவிரவாதிக்கு பின்னாள் சென்று அவனையும் சுட்டு வீழ்த்தினார்.

குடும்பத்தினருடன் சிறுது நேரம் பேசியுள்ளார்.அங்கு தொலைத் தொடர்பு வசதி மிகக் குறைவு.தான் ஒரு ஆபரேசனில் இருப்பதாகவும் ,காட்டுப்பகுதியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு தீவிரவாதிகளையும் அவர்கள் கொண்டு வந்த பயங்கர ஆயுதங்களையும் வீரர்கள் கைப்பற்றினர்.அதன் பிறகு மற்ற இரு தீவிரவாதிகளை தேடும் பணி தொடங்கியது. வீரர்கள் இரு குழுவாக பிரிந்து கொண்டனர். OC தலைமையில் ஒரு குழு மற்றும் டாடா தலைமையில் ஒரு குழு. டாடா முன்னனியில் வழிநடத்தினார்.அந்த பகுதி முழுவதும் பெரிய பாறைகள் நிரம்பியிருந்தது.அந்த சரிவுகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர்.தீடீரென ஒரு தீவிரவாதி வீரர்கள் நோக்கி சுட, டாடா தாமதிக்காமல் முன்னே அவனுக்கு நேர் எதிராக சென்று மூன்றாவது தீவிரவாதியை வீழ்த்தினார்.அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக நான்காவது தீவிரவாதி டாடாவை நோக்கி சுட்டான்.அந்த தோட்டா அவரின் வயிற்றுப்பகுதிக்கு கீழே பாய்ந்தது. “டாடா சுடப்பட்டுவிட்டார்” என சக வீரர்கள் கத்த, மீண்டும் தனது கால்களால் வேகமாக எழுந்தார்.விட்டுக் கொடுக்காத வீரம் அந்த மலைச் சாதியினருடையது. ஒரு தோட்டாவா என்னைச் சாய்ப்பது என எழுந்து மீண்டும் தீவிரவாதியை நோக்கி சுடும் போது , மேலும் ஒரு தோட்ட அவரது நெஞ்சுப் பகுதியை துளைத்து சென்றது.ஒரு குண்டடியை தாங்குவது அவ்வளவு எளிதல்ல.அந்த வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும். டாடா நம் நாட்டிற்காக அந்த கரும் இரவில் முன்னனி பகுதியில் வீரமரணம் அடைந்தார்.அவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர்.அவர்களுக்கு தன் அப்பா தங்களுடன் இனி இல்லை என்பது புரியாத வயது.வீட்டின், கிராமத்தின்  அந்த மாநிலத்தின் மட்டுமல்ல நம் நாடு அந்த இரவில் ஒரு மாபெரும் வீரத்தை இழந்துவிட்டது. அவர் முன்னனியில் தாக்கியது அவருக்காக அல்ல, தன் உயிரை சிறிதும் எண்ணாமல் தன் சக வீரர்களை காப்பாற்றினார்.நான்காவது தீவிரவாதி மற்ற வீரர்களால் வீழ்த்தப்பட்டான்.

நாட்டிற்காக என் உயிர் தேவைப்பட்டால் தயார் என அவர் முன்பே ஒரு முறை அவரது பாதிரியாரிடம் கூறியிருந்தார்.அவரது மகன் நான் இராணுவ அதிகாரியாக ஆசைப்படுகிறேன் என வேகத்துடன் கூறுவது நமது கண்களில் கண்ணீரை கசியச் செய்கிறது.அவர் இங்கு தான் எங்களுடன் உள்ளார் என அவரது மனைவி கூறும் வார்த்தைகள் நம் இதயத்தை பிளந்து தான் செல்கின்றன.டாடா ஒரு மாபெரும் வீரம் என அவரது கமாண்டிங் அதிகாரி மனிஷ் அவர்கள் புகழாரம் சூட்டுகிறார்.

அவரது வீரத்தை எழுத இந்த இடம் போதுமானதல்ல.

 போரில் காட்டிய அதிகபட்ச வீரம் காரணமாக அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.அந்த விருது குடியரசு தினத்தன்று (2017) அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.