எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்களுடன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று தெற்கு மண்டல தலைமை தளபதி சசிந்தர் குமார் ஷைனி கூறினார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் 2018-2019ஆம் ஆண்டில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டமும், பதக்கங்களும் வழங்கி கெளவுரவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 204 பேர் பயிற்சி பெற்று இந்திய ராணுவத்தில் பணியில் சேர்கின்றனர்.
இதில் 165 ஆண்கள் மற்றும் 39 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 12 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் பூட்டான் , மாலத்தீவு, உகாண்டா உள்ளிட்ட தோழமை நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தெற்கு மண்டல தலைமை தளபதி சசிந்தர் குமார் ஷைனி மேற்பார்வையில் இவர்களது அணிவகுப்பு நடைபெற்றது.
நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிந்தர் குமார் ஷைனி, வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இளம் வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதாகக் கூறினார்.
பயிற்சி முடிந்து உற்சாகமாக எல்லைக்குப் புறப்பட்ட வீரர்களை கண்ணீருடன் கட்டியணைத்து அவர்களது குடும்பத்தினர் வழியனுப்பி வைத்தனர்.