எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி ஈரான் நிதியுதவி செய்துள்ளது சவூதி அரேபியா

சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, ஈரான் ஆயுதங்களை வழங்கி உதவியதாக சவூதி அரேபிய பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

சவூதி அரேபியாவில் அரம்கோ நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கடந்த 14ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளுக்கு ஈரான் தான் ஆயுதங்களையும், ஆளில்லா விமானங்களையும் வழங்கி உதவியதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

ரியாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் பாதுக்காப்புத்துறை செய்தி தொடர்பாளர், துர்க்கி அல்-மால்கி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிக துல்லியம் வாய்ந்த ஏவுகணைகளின் சிதைந்த பாகங்களை வெளியிட்டார்.

இந்த ஏவுகணைகளும், ஆளில்லா விமானங்களும் நாட்டின் வடக்கு திசையிலிருந்து ஏவப்பட்டதாகவும், அவற்றை ஈரான் தான் வழங்கியது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதியாகி உள்ளது. ஏமனில் இருந்து எந்த வகையிலும் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை.

மேலும் 18 ஆளில்லா விமானங்களும், 7 அதி துல்லிய ஏவுகணைகளும் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டது.

இருப்பினும், பத்திரிகையாளர்கள் கேட்டபோது அல் மால்கி ஈரானை நேரடியாக குற்றம் சாட்டவில்லை. “குற்றவாளிகள்” உறுதியாக அடையாளம் காணப்பட்டவுடன் அது குறித்து வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் ஆலோசகர் ஹெசமோடின் ஆஷ்னா தனது டுவிட்டரில் “ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எங்கிருந்து தயாரிக்கப்பட்டன அல்லது ஏவப்பட்டன என்பது பற்றி சவூதி அரேபியாவுக்கு எதுவும் தெரியாது என்பதை பத்திரிகையாளர் சந்திப்பு நிரூபித்தது, மேலும் நாட்டின் பாதுகாப்பு அமைப்பு அவற்றை ஏன் தடுக்கத் தவறியது என்பதை விளக்கத் தவறிவிட்டது என கூறி உள்ளார்.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.