பாலகோட்டில் பயங்கரவாதிகள் பயிற்சி

இந்திய விமானப்படையால் தாக்கப்பட்ட, பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, மீண்டும் பயிற்சியை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் கடந்த பிப்.14 ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்ட பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் சேதமடைந்துள்ளதாகவும், பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்து 7 மாதங்கள் முடிந்த நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு மீண்டும் பயிற்சியை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், காஷ்மீர் மட்டும் அல்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் வகையில், இங்கு 40 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பாகிஸ்தானின் முழு ஆதரவும் உள்ளது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகம்கமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டது. இதற்காக அந்த அமைப்பின் முகமது அப்துல் ராவுப், ஐஎஸ்ஐ அமைப்பை சந்தித்து ஆலோசனை நடத்தியது. இதனை தொடர்ந்து, பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மட்டும் அல்லாமல், மஹாராஷ்டிரா, குஜராத்திலும் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. சர்வதேச நெருக்கடியை தவிர்க்கும் வகையில், புதிய பெயரில் செயல்படவும், தாக்குதலுக்கு காஷ்மீரை சேர்ந்தவர்களை பயன்படுத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. பாலகோட் தவிர்த்து, மன்ஷேரா, குல்பூர் மற்றும் கோட்லி பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி நடந்து வருகிறது. ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு, பல பகுதிகளில் ஆட்களை தேர்வு செய்து வருவதுடன், காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக, ஆப்கனில் செயல்படும் தனது துயக்கத்தினரை காஷ்மீருக்கு படிப்படியாக அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்து. இந்தியாவுக்குள் ஊடுருவதற்காக, பூஞ்ச், ரஜோரி பகுதிகளில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள், பயிற்சி தளத்தில் தயாராக உள்ளனர். ஜம்முவில் உள்ள ராணுவ குடியிருப்பு மற்றும் ராணுவ வீரர்களை குறிவைக்கும்படி, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamalar

Leave a Reply

Your email address will not be published.