கடந்த 7ஆம் தேதி அதிகாலை, நிலவில் பதமாகத் தரையிறக்க முயன்றபோது, கடைசி நேரத்தில் தகவல் தொடர்பை இழந்த சந்திராயன் 2 திட்டத்தின் லேண்டர் விக்ரம், கடினமான முறையில் தரையில் விழுந்துவிட்டதாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது.
சந்திராயன் 2 திட்டத்தின் விக்ரம் லேண்டரை, கடந்த 7ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில், சாஃப்ட் லேண்டிங் எனப்படும் முறையில் நிலவில் பதமாகத் தரையிறக்கும் முயற்சி நடைபெற்றது. 30 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து லேண்டரை தரையிறக்க முயன்றபோது, 2.1 கிலோமீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பை இழந்தது.
அதன் பிறகு லேண்டருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. அதன் திட்டமிடப்பட்ட ஆயுள் காலமான 14 நாட்களில் தகவல் தொடர்பை மீட்டமைக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்கெனவே அனுப்பிய எல்ஆர்ஓ எனப்படும் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
இது, லேண்டர் விக்ரம் தரையிறங்கியிருக்க வேண்டிய இடத்தை கடந்த 17ஆம் தேதி படம்பிடித்துள்ளது. அந்த புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. அதில் லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
எல்ஆர்ஓ ஆர்பிட்டர், மாலை நேரம் துவங்கும் சமயத்தில் இந்த புகைப்படத்தை எடுத்ததால், நிழல் மறைத்து இருட்டாக இருக்கும் இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கலாம் என்றும் நாசா கூறியுள்ளது.
எல்ஆர்ஓ ஆர்பிட்டரானது மீண்டும் அதே பகுதியை அக்டோபரில் கடக்கும்போது லேண்டர் விக்ரம் படம் பிடிக்கப்படும் என்றும், அப்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது.
Simpelius N மற்றும் Manzinus C எனப்படும் இருபெரும் பள்ளங்களுக்கு இடைய அமைந்த சீரான சமவெளிப் பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்க முயன்றபோது, அது கடினமான முறையில் தரையில் விழுந்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது. அது தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை இதுவரை கண்டறியப்படவில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது.
Polimer