குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணிக்கவுள்ள விமானம் பாகிஸ்தான் வான்பரப்பில் பறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருவதால், இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணிக்க இருக்கும் விமானம், பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவலை ஏ.எப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் நடவடிக்கைகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் திங்கட்கிழமை ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.