Breaking News

உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்

உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம் என மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பறப்பதற்கான உடைகளை அணிந்து கொண்டார்.

இதன்பின் விமானத்தில் ஏறிய அவர் சுற்றியிருந்தவர்களை நோக்கி கைகளை அசைத்து பறப்பதற்கு தயாரானார். தேஜஸ் போர் விமானத்தில் அவருடன் விமான படை தளபதி என். திவாரியும் சென்றார்.

இதனை தொடர்ந்து ராஜ்நாத் சிங் விமானத்தில் பறந்து சென்றார். இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் முதல் மத்திய ராணுவ மந்திரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஏறக்குறைய 30 நிமிட பயணத்திற்கு பின் தேஜஸ் போர் விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதன்பின் பேட்டியளித்த சிங், விமானம் மிக மென்மையாக சென்றது. பயணம் செய்ய வசதியாக இருந்தது. விமானத்தில் பயணித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எச்.ஏ.எல். (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் பல்வேறு தொடர்புடைய நிறுவனங்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிலைக்கு நாம் வந்துள்ளோம் என்று அவர் கூறினார்.

இதன்பின் விமான படை தளபதி மற்றும் ஏரோநாட்டிக்கல் வளர்ச்சி கழகத்தின் திட்ட இயக்குனரான என். திவாரி கூறும்பொழுது, தேஜஸ் விமானத்தில் பறந்ததில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார். காற்றில் ஒலியின் வேக அளவான மேக் 1, என்பதற்கு நிகராக நாங்கள் வேகமுடன் விமானத்தில் பறந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேக் 1 என்பது மணிக்கு 1,195 கி.மீ. தூரத்திற்கு செல்லும் வேகம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.