எல்லையை காப்பது எப்படி என்பது குறித்து, சீனா எல்லைக்கு அருகில் முழு அளவிலான போர் ஒத்திகையை நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. 5000 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஒத்திகைக்காக அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் வாங்கப்பட்ட பீரங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
நாட்டின் மலைபிராந்தியங்களில் உள்ள எல்லையை ஆக்கிரமிக்கும் எதிரிகளை விரட்டி அடித்து, எல்லையை காப்பது குறித்த யுத்த கள பயிற்சியை மேற்கொள்ள ராணுவம் திட்டமிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நிஜ போர்க்களத்தை ஒத்த ஒரு பயிற்சியை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த 6 மாதங்களாக கிழக்கு பிராந்திய ராணுவம் திட்டமிட்டு வந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் வருகிற அக்டோபர் மாதம் போர் ஒத்திகையை நடத்த ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி ஹிம் விஜய் என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சியில் முதல் முறையாக 5000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
மலை பகுதி தாக்குதலில் ஈடுபடும் வகையில் இந்திய ராணுவம் புதிதாக உருவாக்கி உள்ள 17-வது மவுண்டன் ஸ்டிரைக் அணியின் வீரர்கள் தாக்குதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். இதே நேரத்தில் திசாப்பூர் படைத்தளத்தைச் சேர்ந்த 2500 வீரர்கள் எல்லையின் தங்கள் பகுதியை காப்பவர்கள் போல பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்த பயிற்சியின் போது, தாக்குதலில் ஈடுபடும் வீரர்களை , போர்கள ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு விமானம் மூலம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த பணியின் போது மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா முகாமில் இருந்து வீரர்கள் சி 17, சூப்பர் ஹெர்குலஸ், ஏஎன் -32 ஆகிய விமானங்களோடு, அமெரிக்காவில் இருந்து புதிதாக வாங்கப்பட்டுள்ள சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மூலமும் களத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ள எம் -777 இலகு ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கே-9 வஜ்ரா, M777 ரக பீரங்கிகளை கொண்டும் தாக்கி பயிற்சி பெற திட்டமிடப்பட்டுள்ளது. சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த பீரங்கிகளை ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருணாசலபிரதேசம் மற்றும் லடாக் பிராந்தியத்தில் உள்ள மலை சிகரங்களில் மிக உயர்ந்த இடத்தில் சீனா ராணுவத்துடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
இது போன்ற ஒரு போர்க்களத்தில் எதிரியை தாக்கி விரட்டுவது எப்படி என்பதை இந்திய ராணுவம் இந்த ஒத்திகையின் போது முதல் முறையாக செய்து பார்க்க உள்ளது. அதிலும் சீனாவின் எல்லைக்கு அருகில் ஹிம் விஜய் போர் ஒத்திகை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.