: ஐ.நா.,மனித உரிமை ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, காஷ்மீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினார்.
காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சீனாவை தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவில்லை. இதனால், சர்வதேச அமைப்புகளில் இந்த விவகாரத்தை எழுப்ப உள்ளதாக அந்நாடு கூறியது. இதன் இடையே, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டம் இன்று (செப்.,9) முதல் வரும் 27 வரை நடக்க உள்ளது.
இந்நிலையில், இந்த ஆணையத்தில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 115 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பாகிஸ்தான் தாக்கல் செய்துள்ளதாகவும், அதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு பிறகு, தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி பேசும்போது, காஷ்மீரில், மனித உரிமை மீறப்படுகிறது. இது குறித்து ஐ.நா., விசாரணை நடத்த வேண்டும். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டும். இந்த குழு அமைப்பதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றார்.
இந்த கூட்டத்தில், இந்திய தரப்பில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த அஜய் பசாரியா, விஜய் தாகூர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் கருத்துகளுக்கு, உரிய பதிலடி கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. கில்ஜித்-பல்டிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கொடூரங்களை செய்யும் பாகிஸ்தான், இந்தியா நோக்கி கை நீட்டுகிறது. இந்தியாவில் நடக்கும் விவகாரங்களில், பாகிஸ்தான் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவில் நடப்பது எங்கள் விவகாரம். நாங்கள் எதிர்க்கட்சி. அரசை விமர்சனம் செய்வோம். ஆனால், தேசத்திற்காக ஒன்றாக இணைவோம். பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பையும் தர மாட்டோம் என்றார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், மலுவானா மசூத் அசார், இந்திய ராணுவத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளார். நமது வீ ரர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனக்கூறுகிறார். இதில், எந்த முகத்தை வைத்து கொண்டு, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்