விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்கு இஸ்ரோ ஒப்பந்தம்

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தொடர்பாக இஸ்ரோ நிறுவனத்துக்கும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்குள், அதாவது 2022-ம் ஆண்டுக்குள், விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘ககன்யான்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ககன்யான்’ திட்டத்தின்கீழ், விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வினியோகம் செய்ய உள்ளது.

மேலும், சில முக்கியமான தொழில்நுட்பங்களையும் இஸ்ரோவுக்கு டி.ஆர்.டி.ஓ. வழங்குகிறது. விண்வெளி உணவு, விண்வெளியில் உடல் நிலையை கண்காணிக்கும் தொழில்நுட்பம், அவசர காலத்தில் தப்பிக்கும் உபகரணங்கள், கதிர்வீச்சை அளவிடும் கருவி, வீரர்கள் பயணிக்கும் கூண்டு பகுதியை பத்திரமாக மீட்பதற்கான பாராசூட் உள்ளிட்டவற்றை டி.ஆர்.டி.ஓ. வழங்குகிறது.

இதற்காக இஸ்ரோ-டி.ஆர்.டி.ஓ. இடையே நேற்று டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் விண்கல மையத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் நாயர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, டி.ஆர்.டி.ஓ. ஆய்வுக்கூடங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

டி.ஆர்.டி.ஓ. தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, உயிரி அறிவியல் பிரிவு தலைமை இயக்குனர் ஏ.கே.சிங் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர், சதீஷ் ரெட்டியும், ஏ.கே.சிங்கும் பேசுகையில், ‘ககன்யான்’ திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு தேவைப்படும் அனைத்து தொழில்நுட்பங்களையும், ஆதரவையும் வழங்க உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்தனர்.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.