தெற்கு காஷ்மீரின் சோபோரில் இரண்டு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரண்டு வயது சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த 8 பயங்கரவாதிகள் நேற்று (செப்., 9) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் அச்சுறுத்தும் வகையில் போஸ்டர்களை தயாரித்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். கைது செய்யப்படவர்கள் ஐஜாஸ் மிர், ஓமர் மிர், தவ்சீப் நஜார், இமிதியாஸ் நஜார், ஓமர் அக்பர், பைசான் லத்திப், டேனிஷ் ஹபிப் மற்றும் ஷோகட் அஹ்மத் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து போஸ்டர் அச்சடிக்க பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள், பிற உபகரணங்கள் மற்றும் போஸ்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளின் அறிவுறுத்தலால் தான் இந்த போஸ்டர்கள் பரப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதிகளின் இந்த செயல்கள் மக்களிடையே அச்சத்தை உண்டாக்குவதாகவும், காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தால் இரு நாடுகளுக்கிடையே பிரச்னை ஏற்படும் சூழலால் ஜம்மு காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பப்பட்டது.