பிரான்ஸ் செல்கிறார் ராஜ்நாத் சிங்: அக்.8-ல் ரஃபேல் போர் விமானத்தைப் பெறுகிறார்

பிரான்ஸிடமிருந்து வரும் அக்டோபர் 8-ம் தேதி ரஃபேல் போர் விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொள்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டது. கடந்த 2016-ல் 36 ரஃபேல் விமானங்களை 7.8 பில்லியன் யூரோவுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போர் விமானத்தை வரும் அக்டோபர் 8-ம் தேதி ராஜ்நாத் சிங் பெறுகிறார்.
இதற்காக அவர் பிரான்ஸ் செல்கிறார். அவருடன் பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சிலரும் செல்கின்றனர்.
முன்னதாக, பாலாகோட் தாக்குதல் பொறுப்பாளர், விமானப் படை தளபதி தோனா ஆகியோர் செப்டம்பர் 19, 20 தேதிகளில் ரஃபேல் விமானத்தைப் பெறுவதாக இருந்தது. ஆனால் அதில் சிறு திருத்தம் செய்யப்பட்டது.
திட்டமிடப்பட்ட அந்த நாளில் அதே குழு பிரான்ஸில் ரஃபேல் கொள்முதல் தொடர்பான சில ஒப்பந்தங்களை கையெழுத்திடுகிறது. அதன்பின்னர் இந்திய விமானிகள் ரஃபேல் போர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியைப் பெறுகிறார்கள்.
இந்திய விமானிகள் ரஃபேல் பயிற்சியை மேற்கொண்டுவிட்டால் அக்டோபர் 8-ல் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் செல்லும்போது அவர்களால் பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் அந்த விமானத்தை இயக்கிக் காட்ட இயலும். இதற்காகவே திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.
மேலும், அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப் படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனாலேயே அன்றைய தினம் விமான கொள்முதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அக்டோபர் 8-ம் தேதி தசரா பண்டிகையையும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரபூர்வமாக அக்டோபர் 8-ல் ரஃபேல் இந்திய விமானப் படையில் இணைந்தாலும்கூட 2020 மே மாதத்தில்தான் அவை இந்தியாவுக்கு வந்து சேரும்.
ANI/Hindu 

Leave a Reply

Your email address will not be published.