இந்தியாவில் பண்டிகை சமயங்களில் தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடு 2 மாதங்களில் 60 தீவிரவாதிகள் வரை ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் தீவிரவாத இயக்கங்கள் முன்பைவிட வன்மத்துடன் இருப்பதாக உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 5 இடங்கள் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் தாக்குதலை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2 மாதங்களில் 60 தீவிரவாதிகள் வரை ஊடுருவியிருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இருந்ததை விட தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்வில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் எல்லைக்கு அருகில் 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது உளவுத்துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Polimer