சந்திரயான் 2 லிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை அதிகாலை நிலவில் தரையிறங்குகிறது. இந்த நிகழ்வை பெங்களூரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த துணை செயற்கைக் கோளான விக்ரம், நிலவுக்கு அருகே 35 கிலோ மீட்டர் தூரத்தில் வட்டமிடுகிறது.நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்குவதற்காக இடத்தை இன்று தேர்வு செய்து நாளை அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.பூமியை விட்டு புறப்பட்டு 47 நாட்களாகிய நிலையில் சந்திரயான் 2 விண்கலத்தின் பயணம் நிலவைத் தொட இருக்கிறது. அதன் லேண்டர் விக்ரம் இரண்டு இடங்களைத் தேர்வு செய்துள்ளது.
இறுதியாக சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு 100 மீட்டர் தூரத்தை எட்டியதும் இரண்டு இடங்களில் ஓரிடத்தை விக்ரம் லேண்டர் தேர்வு செய்யும். 65 நொடிகளுக்குப் பிறகு 10 மீட்டர் அளவுக்கு நெருங்கி, தனது தரையிறங்கும் இடத்தை அது தேர்வு செய்யும். அடுத்த 13 நொடிகளில் அது நிலவைத் தொட்டு விடும். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து இந்தியா நிலவைத் தொட்ட நான்காம் நாடாக இந்தியா வரலாற்றில் இடம் பெற உள்ளது.
இந்த அற்புதமான தருணத்தை பார்ப்பதற்காக பிரதமர் மோடி இன்று இரவு பெங்களூர் செல்கிறார். இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அவர் இந்த நிகழ்வை பார்வையிடுகிறார். பிரதமருடன் 70 மாணவர்களும் இந்த அற்புத நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு இஸ்ரோ செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு மையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.