பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல்: 16 விலங்குகள் பலி

பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையிலும் பாகிஸ்தான் ராணுவம் திருந்தியபாடில்லை.

அந்த வகையில், காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ராஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தும் மோர்டார்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 விலங்குகள் உயிரிழந்தன. விடிய விடிய பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில அச்சம் ஏற்பட்டது.

நிகழாண்டில் மட்டும் பாகிஸ்தான் 2050 முறை எல்லையில் அத்து மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இந்திய தரப்பில் 21 பேர் பலியாகியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ராணுவம் மதிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Thanthi

Leave a Reply

Your email address will not be published.