ராணுவத்தை நவீனமயமாக்க 130 பில்லியன் டாலர் – மத்திய அரசு

ராணுவத்தை நவீனமயமாக்க 130 பில்லியன் டாலர் – மத்திய அரசு

ராணுவத்தை நவீனமயமாக்க அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் சுமார் 130 பில்லியன் டாலர் தொகையை செலவழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்கு தொடர்ந்து அண்டை நாடுகளால் போர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய ஆயுத கொள்முதல் மூலமாக இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை நவீனப்படுத்துவதற்காக, 130 பில்லியன் டாலர் செலவில் நவீன ஆயுதங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்விமானங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கடற்படை பலத்தை அதிகரிக்கும் வகையில், 200 போர்க்கப்பல்கள், 500 விமானங்கள், 24 தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஆகியவற்றை அடுத்த 4 ஆண்டுகளில் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் விமானப்படை பாதுகாப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

5,000 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை துல்லியமாக அழிக்கக் கூடிய அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தவும் இந்தியா பணிகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது இந்தியாவிடம் 700 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய அக்னி-1, இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை தாக்குதல் நடத்தும் அக்னி-2 , 2500 கிலோமீட்டர் முதல் 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட அக்னி-3 மற்றும்-4 ஏவுகணைகள் உள்ளன.

கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தும் அக்னி போன்ற ஏவுகணைகள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், வடகொரியா ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.