அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்திய வருகையின் போது, அவாக்ஸ் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு கொள்முதல் மற்றும் டெர்பி ஏவுகணைகள் பாயும் வரம்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்தியா வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி அன்று அவரது பாதுகாப்புக் குழு ஒன்று டெல்லி வருகிறது.

பெஞ்சமின் நேதன்யாகுவின் பாதுகாப்பு ஆயத்தப் பணிகளை அந்தக் குழு மேற்கொள்ளவுள்ளது. அடுத்த மாதம் 7 அல்லது 8 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் சந்திப்பின் போது வேளாண்மை, நீர் மற்றும் கழிவு மேலாண்மையில் ஒத்துழைப்பை நல்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அவாக்ஸ் என்ற 2 வான் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளை கொள்முதல் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

அவாக்ஸ் என்ற அமைப்பின் மூலம் 400 கிலோ மீட்டர் பரப்பளவில் வானிலும், தரையிலும், கடலிலும் எதிரிகளின் நடமாட்டத்தை 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.

ஒரே நேரத்தில் 60 இலக்குகளை லாக் செய்து தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த அமைப்புகள் பாகிஸ்தானிடம் ஏழு உள்ளன. இந்தியாவிடம் ஐந்து உள்ளன.

இது ஒருபுறமிருக்க இஸ்ரேலிடம் இருந்து வாங்கிய டெர்பி ஏவுகணைகள் பாயும் வரம்பை 50 கிலோ மீட்டரில் இருந்து மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் பேசப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.