இந்திய விமானப்படைக்கு புதிதாக விமானங்களை வாங்க முடிவு

இந்திய விமானப்படைக்கு 33 புதிய விமானங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விமானப்படையில் தாக்குதல் திறனுக்கு கூடுதல் வலிமை சேர்க்க இந்த விமானங்களை வாங்க விமானப்படை திட்டமிட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு படைகளை வலிமை மிகுந்ததாக மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விமானப்படையின் வலுவை அதிகரிக்க புதிதாக 33 விமானங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 21 மிக் 29 ரக விமானங்களும், 12 சுகோய் 30 ரக விமானங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்தியா- ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையிலான கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னரே விமானம் வாங்கும் திட்டத்தை முன்னெடுக்க விமானப்படை முடிவு செய்துள்ளது.

இதில் ரஷ்ய தயாரிப்பான சுகோய் 30 ரக விமானங்கள், அந்நாட்டு ஒப்புதலுடன், இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 272 விமானங்களை தயாரிக்க , இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் புதிதாக மேம்படுத்தப்பட்ட மிக் 29 விமானங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையில் உள்ள மிக் 29 ரக விமானங்களை விட புதிய விமானங்களில் ரேடார்கள் அதிக சக்தி வாய்ந்தவையாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக் 29 ரக விமானங்களை வாங்குவதற்காக பேரம் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

“இந்திய விமானப்படை மேற்கொண்ட ஆய்வில்,மிக நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் செயல் திறன் உள்ளதால் மிக் 29 ரக விமானங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மிக 29 ரக விமானங்களை இந்திய விமானப்படை நீண்டகாலமாக இயக்கி வருவதால், விமானிகள் அவற்றை எளிதாக கையாள்கிறார்கள். ஆனால் புதிதாக வாங்கும் விமானங்களில் சில மாறுபாடுகள் இருக்கும் என்பதால் அவற்றுக்கு விமானிகள் பயிற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.

இந்திய கடற்படையிலும் மிக் 29 கே ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பணிக்கு மிகவும் உகந்தவை என்பதால், இந்திய விமானப்படையில் உள்ள 54 மிக் 29 ரக விமானங்களை நவீனப்படுத்தும் பணியும் இப்போது நடைபெற்று வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published.