ஜம்மு காஷ்மீரில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேரில் ஆய்வு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புக்காக 5 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், மெல்ல இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அனைத்து காஷ்மீர் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மெஹ்பூபா முப்தி, ஓமர் அப்துல்லா எங்கு இருக்கின்றனர் என்ற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இணையம், தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டதால் வெளியுலக தொடர்பு இல்லாமல் மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கும் நிலை காணப்பட்டது. சுமார் 5 லட்சம் படைவீரர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீநகருக்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளூர் மக்களிடமும் ராணுவ வீரர்களிடமும் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். மத்திய அரசின் புதிய முடிவால் காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அஜித் தோவல் உறுதியளித்தார். மக்களுடன் சேர்ந்து உணவருந்திய அவர் அவர்களின் தேவையற்ற அச்சத்தைப் போக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதே போன்று ராணுவ வீரர்களிடம் உரையாடிய அஜித் தோவல், காஷ்மீரின் எதிர்காலம் அவர்களின் கைகளில்தான் உள்ளது என்று கூறினார். சூழ்ந்துள்ள ஆபத்துகளை தாம் அறிந்திருப்பதாகவும் கூறிய அஜித் தோவல், பாதுகாப்பு படையினர் விழிப்புடன் இருந்து அசம்பாவிதங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அவசியத் தேவைகளுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, ரேசன் கடைகள், மருந்து கடைகள், சில உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் நேற்று மாலை திறக்கப்பட்டன. சாலையில் குறைந்த அளவிலான மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. சோபியான் உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரளாகக் கூடும் சந்தைகள் நேற்று ஆள் அரவமற்று வெறிச்சோடியிருந்தன.
இதனிடையே ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வெள்ளிக்கிழமை தொழுகைகள் நடத்தப்படுவதற்கும் வரும் வாரத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதற்கும் ஏற்பாடுகளை செய்வது குறித்து அவர் பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் விளக்கம் அளிக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published.