காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அணுகுண்டு போர் வெடிக்கும் – பாகிஸ்தான் மந்திரி மிரட்டல்

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அணுகுண்டு போர் வெடிக்கும் என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மோடி, காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாடு சமரசம் செய்வதற்கு இடமில்லை. அனைத்து பிரச்சினைகளையும் இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்த்துக்கொள்ளும் என்று கூறினார்.

இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் அணுகுண்டு போர் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கு மறுநாளே பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமதுவும் இதே மிரட்டலை விடுத்துள்ளார்.

அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசியபோது, “காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே அணுகுண்டு போர் வெடிக்கும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே பாகிஸ்தான் சென்றுள்ள சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் துணைத் தலைவர் சூ கிலியாங் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பாகிஸ்தான் ராணுவ தலைவர் காமர் ஜாவித் பாஜ்வா உடன் தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்தும் இருவரும் பேசியதாக தெரிகிறது. காஷ்மீர் விவகாரத்தை புரிந்துகொண்டதற்காகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் சீனாவுக்கு பாஜ்வா நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் திறனை மேம்படுத்துவது ஆகியவை குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Leave a Reply

Your email address will not be published.