Breaking News

தீவிரவாதிகள் ஊடுருவல்? : தமிழகத்தில் உஷார் நிலை!

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 பேர், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரும் கோவையில் புகுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும், மற்றவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் கோவையில் இருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல்வேறு இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கையையடுத்து கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமீத்சரண் கூறியுள்ளார். ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் மேட்டுப்பாளையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லையான 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர். கருங்கல்பாளையம், நொய்யல்,சத்தியமங்கலம் உள்பட அனைத்து சோதனை சாவடிகளில் போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.