ராணுவ வீரர்களுடன் இணைந்து ரோந்துப் பணியில் தோனி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இரண்டு வாரங்களுக்கு ராணுவக் குழுவினருடன் இணைந்து ரோந்துப் பணியை மேற்கொள்ள இருக்கிறார்.

அண்மையில் இந்திய அணியின் மேற்கிந்திய தீவு சுற்றுப் பயணத்தில் தோனி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அவர் ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள இருப்பதாக ராணுவத் தலைமை ஒப்புதல் அளித்தது. காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் இணைந்து அவர் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து பாராசூட்டில் இருந்து கீழே குதிப்பதற்கான பயிற்சியை தோனி பலமுறை மேற்கொண்டார்.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் தோனி இணைந்துள்ளார். வருகிற 15ஆம் தேதி வரை அவர் காஷ்மீரில் பணியில் ஈடுபட உள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மற்ற வீரர்களுடன் இணைந்து அவர் மேற்கொள்வார்.

Leave a Reply

Your email address will not be published.