பாகிஸ்தான் பொறுப்பில்லாத அண்டை நாடு என ஜெய்சங்கர் விமர்சனம்

பாகிஸ்தான் பொறுப்பில்லாத அண்டை நாடாக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

மாஸ்கோ சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அந்நாட்டு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன் காஷ்மீர் விவகாரம் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், பாகிஸ்தானுடன் இயல்பான உறவை வைத்துக் கொள்ள தொடர்ந்து இந்தியா போராடி வருவதாக தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுடன் வர்த்தகம் புரிவதற்கும் பாகிஸ்தான் தடையாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இன்று உலகில் வேறு எங்கும் அண்டை நாட்டின் மீது தீவிரவாதத்தை ஏவுகிற ஒரு நாட்டை நீங்கள் காண முடியாது என்றும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்றும் விமர்சித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலய் குடசேவ், காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் என்ற ரஷ்ய அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளும் சிம்லா ஒப்பந்தம், லாகூர் தீர்மானம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Polimer

Leave a Reply

Your email address will not be published.