இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவலா?

ஜம்மு-காஷ்மீர் பகுதியில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியதாக வெளியான தகவல் தவறு என ராணுவத்தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் லே மாவட்டத்தில் டெம்சோக் ((Demchok)) என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தியாவின் லடாக்கையும் சீனாவின் திபெத்தையும் இணைக்கும் பகுதியில் டெம்சோக் அமைந்துள்ளது.
கடந்த ஜூலை 6ஆம் தேதி, தலாய் லாமாவின் 84ஆவது பிறந்தநாளின்போது, டெம்சோக் பகுதியில் சிலர் திபெத் கொடியை உயர்த்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு சீனப் பகுதியில் இருந்து சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவின் பகுதியாக உள்ள திபெத்தை பிரிவினை செய்யும் நடவடிக்கைகளை தடை செய்யுமாறு சீன மொழியில் எழுதப்பட்ட பதாகையை அவர்கள் உயர்த்திப்பிடித்துள்ளனர். அப்படி வந்தவர்கள் சாதாரண உடையில் இருந்த சீன ராணுவ வீரர்கள் என்றும், 40 நிமிடங்கள் அங்கு பதாகையை பிடித்தவண்ணம் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்துவிட்டதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ள ராணுவத் தளபதி பிபின் ராவத், சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றார்.
இந்தியாவின் டெம்சோக் பகுதியில், சில திபெத்தியர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாவும், எல்லைக்கு அப்பாலிருந்து அந்த கொண்டாட்டங்களை பார்க்க சிலர் வந்ததாகவும் அவர் கூறினார்.
மற்றபடி ஊடுருவல் ஏதும் நிகழவில்லை என பிபின் ராவத் தெரிவித்தார். இருப்பினும், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வரை வந்தவர்கள் சீன ராணுவத்தின் உதவியின்றி வந்திருக்க முடியாது என்றும் பிபின் ராவத் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.