Breaking News

ஹோர்முஸ் நீரிணையில் வைத்து பிரிட்டன் கப்பல் சிறைபிடிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் வைத்து, பிரிட்டன் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட வீடியோவை, ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது.

பொருளாதார தடையை மீறி, சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக ஜூலை 4ஆம் தேதி அன்று ஈரானின் கிரேஸ் 1 என்ற கப்பலை பிரிட்டன் சிறைபிடித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக வந்த பிரிட்டனின் ஸ்டெனா இம்பெரோ என்ற கப்பலை, ஈரான் ராணுவம் வெள்ளிக்கிழமை அன்று சிறைபிடித்தது. இதன் காரணமாக ஈரான் – பிரிட்டன் இடையே பதற்றம் சூழ்ந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில், கப்பல் சிறைபிடிக்கப்பட்ட வீடியோவை ஈரான் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அதி விரைவுப் படகுகள் பிரிட்டன் கப்பலை சூழ்ந்து கொள்ள, ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கப்பலுக்கு மேல் பறக்கிறது. அந்த ஹெலிகாப்டரில் முகமூடி அணிந்த வண்ணம் இருக்கும் ஈரான் ராணுவ வீரர்கள், கயிறுகள் மூலம் கப்பலை அடைந்து சிறைபிடிக்கின்றனர்.

அந்தக் கப்பல் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த 18 இந்தியர்கள் உள்பட 23 பேரும் ஈரான் ராணுவத்தின் வசம் உள்ளனர். மீன்பிடிப் படகு மீது மோதி விட்டு எச்சரிக்கையையும் மீறி நிற்காமல் சென்ற காரணத்தால் ஸ்டெனா இம்பெரோவை சிறைபிடித்ததாக ஈரான் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம், இது சட்டவிரோத நடவடிக்கை எனக் கூறியுள்ளது.

பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சனைக்கு தீர்வு காண நினைப்பதாகவும், ராணுவத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும் பிரிட்டன் அரசு கூறியுள்ளது. இந்த விவகாரத்தை, ஐ.நாவின் பாதுகாப்புக் குழுவிற்கும் பிரிட்டன் கொண்டு சென்றுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் ஈரானின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளன. 

Leave a Reply

Your email address will not be published.