சென்னை, கோவையில் ரபேல் போர் விமானங்களின் பராமரிப்புக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி மகேந்திரநாத் பாண்டே கூறினார்.

தொழில்நுட்ப கல்வி பாடத்திட்டங்களை தயாரித்துக் கொடுக்கும், தேசிய தொழில் பயிற்சி ஊடக தயாரிப்பு நிலையத்தின் (என்.ஐ.எம்.ஐ.) ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தேசிய உயர்நிலை பயிற்சி நிலையத்தில் (என்.எஸ்.டி.ஐ.) நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறையின் மந்திரி மகேந்திரநாத் பாண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் அந்த விமானம் சம்பந்தப்பட்ட உதிரிபாகங்கள், பாரமரிப்பு, பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்கான பயிற்சி (ஏரோ என்ஜினீயரிங்) நாட்டிலேயே முதல் முறையாக மராட்டிய மாநிலம் நாக்பூரில் அரசு ஐ.டி.ஐ. கல்வி நிறுவனத்தில் தொடங்கப்படுகிறது. ஏரோ பிட்டர் போன்ற பல்வகை பயிற்சிகள் அங்கு அளிக்கப்படும்.

அதுபோன்ற பயிற்சி சென்னை (என்.எஸ்.டி.ஐ.) மற்றும் கோவையில் (அரசு ஐ.டி.ஐ.யிலும்) விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி அமித் ஷா வெளியிடுவார். இது பொறியியலுக்கு அடுத்தபடியாக வரும் தொழில்நுட்பப் பயிற்சியாக இருக்கும்.

இந்த பயிற்சி, போர் விமான பழுதுபார்ப்பு பணித்திறனை உள்நாட்டிலேயே மேம்படுத்துவதற்கான திட்டமாக அமையும். இங்கு பயிற்சி எடுப்பவர்கள், நாடு முழுவதும் சென்று மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இது பயிற்றுனர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published.